தேடுதல்

Vatican News
ரகோவ்ஸ்கி நகர், தலைமைத்தூதர் புனித மிக்கேல் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ரகோவ்ஸ்கி நகர், தலைமைத்தூதர் புனித மிக்கேல் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

ரகோவ்ஸ்கி கத்தோலிக்க சமுதாயத்துடன் திருத்தந்தை

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். திருஅவை, இங்கு, ஒரு தாயாகச் செயல்படுகிறது. தன் குழந்தைகளின் பிரச்சனைகளை தன் பிரச்சனையாக ஏற்று, ஒப்புரவிற்கு உழைக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ரகோவ்ஸ்கி நகர், தலைமைத்தூதர் புனித மிக்கேல் ஆலயத்தில் கத்தோலிக்க சமுதாயத்தை சந்திப்பதில் மகிழ்கின்றேன். உங்களின் நடனத்தாலும், சாட்சியப் பகிர்வுகளாலும் வழங்கிய வரவேற்பிற்கு என் நன்றி. இந்த பூமி, புனிதத் திருத்தந்தை, 23ம் ஜான் அவர்களுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகவும், அவரால் அதிகம் அன்புகூரப்பட்டதாகவும் இருந்தது ஏன், என்பது குறித்து கொஞ்சம் ஆழமாக புரிந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஆர்த்தடாக்ஸ் சகோதரர்களிடம் நெருங்கிய நட்புணர்வை வளர்த்ததன் வழியாக அவர், தனியார்களிடையேயும், சமூகங்களிடையேயும் உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் பாதையை வகுத்தார்.

தடைகளைத் தாண்டும் அன்பு

கடவுளின் வல்லமை மீது நம்பிக்கைக் கொண்டு செயல்படுபவர்கள், எத்தனை துன்பங்கள் வந்தாலும், அச்சத்தால் பின்வாங்குவதில்லை. அன்பு இறந்துவிடவில்லை, எல்லாத் தடைகளையும் தாண்டி அது வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு சாட்சியாக இருக்க அவர்கள் தயங்குவதில்லை. பிறரன்புப் பணியில் அவர்கள் தங்களையே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில், இறைவனும், மற்றவர்களுக்காக, அவர்கள் தனிமையாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் உணரக்கூடாது என்பதற்காக தன்னையேக் கையளித்தார்.

புலம்பெயர்ந்தோர் முகாம் அனுபவம்

ஒரு சில மணி நேரத்திற்கு முன் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை தற்போது உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இன்று காலையில் நான், Vrazhdebnaவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று, புகலிடம் தேடுவோரையும், அங்கு பணியாற்றும் காரித்தாஸ் பணியாளர்களையும் சந்தித்தபோது, அவர்கள் என்னிடம் கூறியதெல்லாம், அங்கு எவ்வித பாகுபாடுமின்றி, இறைவனின் குழந்தைகள் என்ற அடிப்படையிலேயே அனைவரும் நோக்கப்படுகிறார்கள் என்பதேயாகும். ஒருவரை அன்புகூர்வதற்கு, அவருடைய வாழ்க்கைக் குறிப்புக்களைக் குறித்து கேட்கவேண்டிய தேவையில்லை, ஏனெனில், அன்பு என்பது அனைத்தையும் தாண்டிச் செல்கிறது, முதலடியை அதுவே எடுத்து வைக்கிறது, மற்றும், அது இலவசமானது. இந்த காரித்தாஸ் மையத்தில் பல கிறிஸ்தவர்கள், கடவுளின் தந்தைக்குரிய கண்களுடன் பிறரைப் பார்க்கப் பழகியுள்ளனர். விசுவாசக் கண்களோடு ஒருவரை நோக்கும்போது, அவர் அன்புகூரப்படுவதற்கு தகுதியுடையவரா என்று நாம் தரம் பிரிப்பதில்லை. இந்த காரித்தாஸ் மையத்தில் உள்ளவர்கள், பிரச்சனைகளை உற்றுநோக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அவற்றை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள்.

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் சமூகங்கள்

எதிலும் நம்பிக்கையின்றி தீமையை மட்டும் எதிர்பார்க்கும் குணம் கொண்டவராக இருக்கும் ஒருவரால், நன்மைகளை ஆற்றமுடியும் என்பதை நான் கண்டதில்லை என்று, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் கூறியதை நினைவூட்டுகிறேன். நம் சமூகங்கள், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் சமூகங்களாக மாறவேண்டும்.  இறைவனின் கண்கொண்டு நாம் மற்றவர்களைப் பார்க்கவேண்டுமெனில், அதற்கு மற்றவர்களின் உதவியும் தேவை. இங்கு Mitko மற்றும் Miroslava தம்பதியர், தங்கள் குழந்தை Bilyanaவை நன்முறையில் வளர்க்க, பங்குதளம் வழங்கியுள்ள ஆதரவையும் உதவியையும் குறித்து எடுத்துரைத்தனர். பங்குதளம் என்பது, இல்லங்களுக்கிடையே ஓர் இல்லமாக செயல்படுகிறது. நம் ஒவ்வொருவர் இல்லத்திலும் பிரசன்னமாக இருக்கும் இறைவன், நம்மை நோக்கி, 'சமாதானம் உங்களோடு இருப்பதாக' என்று கூறுகிறார்.

திருஅவை, ஒரு தாயாக...

இரவில் கோபத்தோடு படுக்கைக்குச் செல்லாதீர்கள் என தம்பதியர்களுக்கு நான் வழங்கிய அறிவுரையை நீங்கள் நினைவில் கொண்டுள்ளது குறித்து மகிழ்ச்சி. அருள்பணியாளர்களும் துறவறத்தாரும் உங்கள் மீது அக்கறைகொண்டு செயலாற்றி வருவது குறித்து நீங்கள் பாராட்டி வருகின்றீர்கள். மக்களின் உதவியுடன் தன்னால் எம்முறையில் நல்ல சேவையாற்ற முடிகிறது என ஓர் அருள்பணியாளர் கூறக் கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். திருஅவை இங்கு ஒரு தாயாகச் செயல்படுகிறது. தன் குழந்தைகளின் பிரச்சனைகளை தன் பிரச்சனையாக ஏற்று, வாழ்வுப் பாதையில் ஒன்றிணைந்து நடந்து, ஒப்புரவிற்கு உழைக்கிறது. குடும்பங்களுக்குள் ஒரு குடும்பமாகவும், கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் இல்லமாகவும் திருஅவை உள்ளது. நீங்களும், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, துணிச்சலுடனும், படைப்புத் திறனுடனும் செயல்படுங்கள். இளைய தலைமுறைக்கு இறைவனின் அன்பை எவ்விதம் எடுத்துரைப்பது என்பது குறித்து நம்மையேக் கேட்போம். நம்முடைய அன்றாட பதில்கள் அவர்களுக்கு மனநிறைவைத் தரும் தீர்வுகளை வழங்குவதில்லை. ஆகவே, புதிய மேய்ப்புப்பணி அணுகுமுறைகளும், முயற்சிகளும், தேவைப்படுகின்றன. அவர்கள் இதயங்களைத் தொடவும், அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்துகொள்ளவும், அவர்களின் கனவுகளை ஊக்குவிக்கவும், வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கவும், நாம் ஒரு குடும்பமாக அவர்களுக்கு உதவ வேண்டியுள்ளது.  புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சாதீர்கள். இயேசுவுடன் கூடிய நம் நட்புணர்வு நமக்கு இதில் உதவும். வரலாற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாமும் புதிய அத்தியாயங்களை எழுதுவோம். வாழ்வில், ஒரு செவியை நற்செய்திக்கும், மற்றொன்றை, நம் உடன் வாழ் மக்களின் இதயக் குரல்களுக்கும் வழங்குவோம்.

உங்களுக்கு என் நன்றி. புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை எண்ணிக்கொண்டே, இறைவனின் பரிவை வெளிப்படுத்தும் இறையாசீரை உங்களுக்கு வழங்குகிறேன்.

06 May 2019, 15:04