தேடுதல்

Vatican News
வட மாசிடோனியா வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தை வட மாசிடோனியா வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தை  (Vatican Media)

வட மாசிடோனியா வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தையின் உரை

திருத்தந்தை : பலவண்ணக்கல் ஓவியத்தின் மொத்த அழகிற்கு, ஒவ்வொரு கல்லும் முக்கியத்துவம் நிறைந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

வட மாசிடோனியா அரசுத்தலைவரே, பிரதமரே, அரசு அதிகாரிகளே, சமுதாய மற்றும், மதத்தலைவர்களே, பெரியோரே, பெண்மணிகளே, வட மாசிடோனியா குடியரசுக்கு திருத்தந்தை ஒருவர் வருவது இதுவே முதன்முறை என்பது மட்டுமல்ல, திருப்பீடத்துடன் இந்நாடு அரசியல் உறவை உருவாக்கியதன், 25ம் ஆண்டில், இப்பயணம் இடம்பெறுகிறது.

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே, பாலம்

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே, ஒரு பாலமாகச் செயல்படும் இந்நாடு, பைசாந்திய, மற்றும், ஒட்டமான் வரலாற்றின் அழகு நிறை சாட்சியங்களுடனும், திருத்தூதர்கள் காலத்திலிருந்தே தொடரும் கிறிஸ்தவத்தின் கோவில்களுடனும், உயர்ந்து நிற்கும் இந்நாடு, மலைக்கோட்டைகளையும் கொண்டு, பல்வேறு இன, மற்றும், மத முகத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. இந்நாட்டில், பல்வேறு இனங்களும், கலாச்சாரங்களும், மதங்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றன.

இங்கு, ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவ சபையினர், இஸ்லாமியர், யூதர்கள் என்ற மதத் தனித்தன்மை அடையாளங்களும், மாசிடோனியர்கள், அல்பேனியர்கள், குரவேசியர்கள், செர்பியர்கள், மற்றும், பல்வேறு ஏனைய இனத்தவர்களும் இணைந்து, பலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட ஒரே ஓவியமாக அழகுற காட்சியளிக்கின்றனர். இந்த பலவண்ணக்கல் ஓவியத்தின் மொத்த அழகிற்கு, ஒவ்வொரு கல்லும் முக்கியத்துவம் நிறைந்தது. ஒன்றிணைந்து வாழும் இவ்வழகை, உங்கள் வருங்காலத் தலைமுறைக்கும் வழங்க மறவாதீர்கள்.

புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடம்

இந்நாட்டின் அரசு அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கம், காரித்தாஸ், மற்றும், பல அரசு சாரா அமைப்புக்களின் உதவியுடன், புலம் பெயர்ந்த மக்களை வரவேற்று அவர்களுக்கு உதவுவதைப் பாராட்டுகிறேன். ஏழ்மையாலும், மோதல்களாலும் மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து வெளியேறி, உங்கள் நாடு வழியாக, ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச்சென்ற மக்களுக்கு, நீங்கள் அடைக்கலம் கொடுத்து ஆதரித்துள்ளீர்கள். நீங்களே பல்வேறு பொருளாதாரச் சுமைகளை அனுபவித்து வந்தாலும், மற்றவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, உங்களுக்குரியதை, அவர்களுடன் பகிர்ந்து உதவியுள்ளீர்கள்.

அன்னை தெராசாவின் நாடு

இவ்வேளையில், உங்கள் நாட்டில் பிறந்து, கைவிடப்பட்டோருக்கும், ஏழைகளுள் ஏழையாக வாழ்ந்த மக்களுக்கும் உதவ, இந்தியாவில் பணிபுரிந்த, அன்னை தெரேசா அவர்களைப்பற்றி குறிப்பிட விரும்புகிறேன். நீங்களும் அன்னை தெராசாவைப்போல், அர்ப்பணிப்பு, மற்றும் நம்பிக்கை உணர்வுடன் பணிகளை ஆற்றுங்கள்.

அரசுத்தலைவரே, இந்நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அரசுத்துறையினருக்கும், மதத்தலைவர்களுக்கும் இடையே, புரிந்துகொள்ளுதலையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்க, நீங்கள் எடுத்துவரும் முயற்சிகளை, திருப்பீடம் அறிந்துள்ளது. இதனோடுகூட, ஒவ்வோர் ஆண்டும் புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் திருவிழாவின்போது, உயர்மட்ட அரசுப் பிரதிநிதிகள் குழு, வத்திக்கான் வருவதற்கும் சேர்த்து, தனிப்பட்ட முறையில் நன்றி கூற இது எனக்கு வாய்ப்பாக உள்ளது. இறைவன், வட மாசிடோனியா நாட்டை ஆசீர்வதித்து, அதற்கு வளத்தையும் மகிழ்வையும் வழங்குவாராக.

07 May 2019, 15:59