தேடுதல்

Vatican News
2019.05.04 Guardie Svizzere Pontificie 2019.05.04 Guardie Svizzere Pontificie  (Vatican Media)

புதிய சுவிஸ் கார்ட்ஸ் வீரர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

வத்திக்கானில் மே 6, வருகிற திங்களன்று சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள் குழுவில், 23 பேர் புதிதாக இணைகின்றனர். இவர்கள், தங்களின் தனிப்பட்ட மற்றும் குழுவின் புதுப்பித்தலின் திருத்தூதர்களாகவும், சாட்சிகளாகவும் வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், அன்றாடப் பணிகளில் தாங்கள் சந்திக்கும் அனைவரும், தங்கள் வழியாக, மனிதர் ஒவ்வொருவர் மீது, இறைவன் வைத்திருக்கும் அன்பைக் கண்டுணரச் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இறைவன், மனிதர் ஒவ்வொருவர் மீது வைத்திருக்கும் அன்பைக் கண்டுணரச் செய்வது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் முதல் மறைப்பணியாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.  

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களை, மே 4, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், பேதுருவின் வழிவருபவருக்கும், திருப்பீடத்திற்கும், வத்திக்கான் நகரத்திற்கும், துடிப்புடனும், தாராளமனதுடனும் ஆற்றிவரும் சேவைகளுக்கு, தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள் நாள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக மாறுவதன் வழியாக, குறிப்பாக, மரணக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இக்காலச் சூழல்களில், உயிர்ப்புக் கலாச்சாரத்தைப் பரப்புவதன் வழியாக, இந்த வியத்தகு உயிர்ப்பு நிகழ்வை, பலனுள்ள முறையில் வாழ முடியும் என்று கூறினார்.

மனவேதனையிலும், குழப்பத்திலும், மனஉளைச்சலிலும் வருகின்ற மக்களைச் சந்திக்கும்வேளையில், ஆறுதலான வார்த்தைகள் மற்றும் உடன்பிறந்த உணர்வுகளை  வெளிப்படுத்தும்போது, சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், உயிர்த்த கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாக மாறுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

நம் மீட்பராம் கிறிஸ்துவின்மீது ஆழமான விசுவாசத்தால் வேரூன்றப்படுவதும், தனிப்பட்ட மற்றும் குழுவின் புதுப்பித்தலின் திருத்தூதர்களாகவும், சாட்சிகளாகவும் வாழ்வதும் தேவைப்படுகின்றன, ஏனெனில், திருப்பீடத்தின் பணியில் இருப்பவர்கள், தங்களின் பணியில் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் தூய வாழ்வு வாழ வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும், திருத்தந்தை கூறினார்.

இத்தகைய வாழ்வை, சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், தங்களின் பணியிலும், குழு அனுபவத்திலும் வாழ இயலும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வீரர்களை இந்தப் பணிக்கு அர்ப்பணித்த அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

சுவிஸ் கார்ட்ஸ்

1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்படபோது, திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட சுவிஸ் வீரர்களில், 147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நன்றியாக, திருத்தந்தை 2ம் ஜூலியஸ் அவர்கள், 1506ம் ஆண்டு சனவரி 22ம் தேதி, சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் அமைப்பை உருவாக்கினார். இவர்கள், 19க்கும், 30 வயதுக்கும் உட்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க இளையோராக இருக்க வேண்டும் மற்றும், சுவிட்சர்லாந்து நாட்டு இராணுவத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சுவிஸ் வீரர்கள் உயிரிழந்த நாளான மே 6ம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் வத்திக்கானில் சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. அன்றைய நாளில் புதிய வீரர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மே 6, வருகிற திங்களன்று நடைபெறும் நிகழ்வில், 23 சுவிஸ் வீரர்கள் புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டு பணி உறுதி எடுப்பார்கள்.

04 May 2019, 14:34