தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது இளையோருடன் - 290519 புதன் மறைக்கல்வியுரையின்போது இளையோருடன் - 290519 

மறைக்கல்வியுரை : தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்

மனித வார்த்தைகளில் தூய ஆவியார் குடியிருக்கும்போது, அவ்வார்த்தைகள் ஆற்றல் மிக்க சக்தியாக மாறி, இதயங்களைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் பலம் பெறுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த வாரம்,  'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே' என்ற இயேசு கற்பித்த செபம் குறித்த புதன் மறைக்கல்வித் தொடரை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வாரம், புதிய தொடர் ஒன்றைத் துவக்கினார்.

‘இயேசு துன்புற்று இறந்த பின்பு..,  அவர்களுக்குத் தோன்றி.....,  தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்...... அவர்களிடம், “நீங்கள் எருசலேமைவிட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்” என்று கூறினார்’ என்ற பகுதி, திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு ஒன்றிலிருந்து முதலில் வாசிக்கப்பட்டது.

திருத்தூதர் பணிகள் குறித்த தன் புதிய தொடரில், இன்று, நற்செய்தி அறிவிப்புக்கும் தூய ஆவியாருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அன்புச் சகோதரர், சகோதரிகளே! இன்று நாம் திருத்தூதர் பணிகள் நூல் குறித்து புதிய தொடரைத் துவக்க உள்ளோம். இறைவார்த்தையை எடுத்துச் சென்று பரப்புவதற்கும், விசுவாச சாட்சியத்துக்குப் பலத்தை வழங்கும் தூய ஆவியாருக்கும், இடையே நிலவும் மிக உயரிய பிணைப்பைக் காட்டுகிறது திருத்தூதர் பணிகள் நூல். மனித வார்த்தைகளில் தூய ஆவியார் குடியிருக்கும்போது, அவ்வார்த்தைகள் ஆற்றல்மிக்க சக்தியாக மாறி, இதயங்களைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் பலம் பெற்றதாக, பிரிவினைச் சுவர்களைத் தகர்த்தெறிகின்றன. தூய ஆவியாரின் கொடை நமக்கு இலவசமாக வழங்கப்படுகிறதே அல்லாமல், நம் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிட்டுவதில்லை. 'தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்' என்ற இறைத்தந்தையின் வாக்குறுதி நிறைவேற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என உயிர்த்த இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்(தி.ப.1:5). இந்த கொடைக்காக இயேசுவின் சீடர்களும், அன்னை மரியாவோடு இணைந்து, இறைக்குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஒன்றுகூடி காத்திருந்தார்கள். தூய ஆவியாரிடம் செபிப்பது, திருஅவைக்குள் நம் ஒன்றிப்பை ஊக்கமூட்டி வளர்ப்பது ஆகியவை வழியாக, இறைவனுக்காக பொறுமையுடன் காத்திருக்கும் வரத்தை அவரிடம் இறைஞ்சுவோம்.

இவ்வாறு, தன் புதிய மறைக்கல்வித் தொடரின் முதல் பகுதியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை சிறப்பிக்கப்படும், இயேசுவின் விண்ணேற்றம் விழா குறித்து, எடுத்துரைத்தார்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உலகம் முடியும்வரை எந்நாள்களும் உங்களோடு இருப்பேன் என, இயேசு தன் சீடர்களிடம் கூறிய அதே வார்த்தைகளை இன்றும் நம்மிடம் உரைக்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவோடு நட்புணர்வு கொண்டிருந்தால், அவர் தன் இருப்பை நமக்குக் காட்டுவார், நாமும் தனிமையில் விடப்பட்டவர்களாகவும், திக்கற்றவர்களாகவும் உணரமாட்டோம், என்றார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2019, 12:11