தேடுதல்

Vatican News
விமானத்தில் பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை விமானத்தில் பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை  (ANSA)

திருத்தந்தை – விமானப் பயணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு

ருமேனிய ஊடகவியலாளர், அந்நாட்டு கம்யூனிச ஆட்சியில் சித்ரவதைகளுக்குப் பலியான கர்தினால் Luliu Hossu அவர்களின் நினைவாக, நூல் ஒன்றை, திருத்தந்தைக்கு அளித்தனர்.

மேரி தெரேசா - வத்திக்கான்

"நாம் இணைந்து நடைபயில்வோம்" என்ற அழைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 31, இவ்வெள்ளி காலையில், ருமேனியா நாட்டிற்கு தனது முதல் திருத்தூதுப்பயணத்தை ஆரம்பித்தார். தனது 30வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாக, உரோம் நேரம் காலை 8.16 மணிக்கு, உரோம் பன்னாட்டு பியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து, ஆல்இத்தாலியா A320 விமானத்தில், ருமேனியத் தலைநகர் புக்காரெஸ்ட்டுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. ருமேனியாவில் தான் மேற்கொள்ளும் மூன்று நாள்கள் பயண நிகழ்வுகளுக்காகத் தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு ஊடகவியலாளர்களையும் திருத்தந்தை வாழ்த்தினார். அச்சமயத்தில், ருமேனிய ஊடகவியலாளர்கள், அந்நாட்டின் கம்யூனிச ஆட்சியின் சித்ரவதைகளுக்குப் பலியான கர்தினால் Luliu Hossu அவர்களின் நினைவாக, நூல் ஒன்றை, திருத்தந்தைக்கு அன்பளிப்பாக அளித்தனர். இத்திருத்தூதுப் பயணத்தில், கர்தினால் Hossu அவர்கள் உட்பட, ஏழு கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்களை அருளாளர்களாக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த எழுவரும், 1950க்கும், 1970ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ருமேனியாவில், கம்யூனிச ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள். மேலும், புக்காரெஸ்ட்டுக்குச் சென்ற இந்த விமானப் பயணத்தில், ஹங்கேரி நாட்டு ஊடகவியலாளர் ஒருவர், ரோமா நாடோடி இனச் சிறார் வரைந்த ஓவியங்களையும், ஹங்கேரி நாட்டு தேசிய கால்பந்து விளையாட்டுச் சட்டை ஒன்றையும் திருத்தந்தைக்கு அளித்தார். பத்து என்ற எண் எழுதப்பட்ட இந்தச் சட்டையில், 'Francesco' என, திருத்தந்தையின் பெயர் ஆங்கிலத்தில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி சொன்ன திருத்தந்தை, ருமேனியாவில் இந்நாள்களில், காலநிலை மோசமாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். பல்கேரியாவுக்குச் சென்றபோதும் அவ்வாறே சொன்னார்கள். ஆனால் அந்நாட்டில் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தன. ருமேனியாவிலும் அவ்வாறே இருக்கும் என நம்புவோம். உங்களது பணிக்கு நன்றி எனக் கூறினார்.

வீடற்ற 15 ருமேனியர் சந்திப்பு

மே 31, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், உரோம் நகரில் வீடின்றி வாழ்கின்ற 15 ருமேனிய நாட்டவரைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை. பாப்பிறையின் தர்மச் செயல்களை ஆற்றும், கர்தினால் Konrad Krajewski அவர்களுடன், திருத்தந்தையைச் சந்தித்த இந்த 15 பேரில் சிலர், வீடற்றவர்க்கென வத்திக்கான் நடத்தும் “இரக்கத்தின் பரிசு” என்ற இடத்தில் தூங்குகின்றனர். மேலும், வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னும், அதை முடித்து வத்திக்கான் திரும்பும் வழியிலும், உரோம் மேரி மேஜர், அன்னை மரியா பசிலிக்கா சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30, இவ்வியாழன் மாலையிலும் அங்குச் சென்று அன்னை மரியாவிடம் செபித்தார். புக்காரெஸ்ட் நகருக்குப் பயணம் மேற்கொண்ட 2 மணி 20 நிமிட நேரத்தில், வழியில் கடந்து சென்ற இத்தாலி, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, மொந்தெநெக்ரோ, செர்பியா, பல்கேரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, நல்வாழ்த்தும், செபமும் நிறைந்த தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார்.

31 May 2019, 15:55