தேடுதல்

Vatican News
முதுபெரும்தந்தை Neofit அவர்களின் வரவேற்புரை முதுபெரும்தந்தை Neofit அவர்களின் வரவேற்புரை  (Vatican Media)

முதுபெரும்தந்தை Neofit அவர்களின் வரவேற்புரை

உரோம் நகரில், புனித கான்ஸ்ட்டைன் சிரில் அவர்களின் கல்லறையில் திருவழிபாடு நடத்தவும், கிறிஸ்துவை அன்புகூரும், பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் மக்களுக்காக அவரின் பரிந்துரையை மன்றாடவும் அனுமதிப்பதற்கு நன்றி – திருத்தந்தையிடம் முதுபெரும்தந்தை Neofit

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையே, ஆர்த்தடாக்ஸ் புனிதர்கள் பெயரில் தங்களை வரவேற்கிறேன். திருஅவையின் வாழ்வு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் வழிநடத்தப்படுகின்றது. எதுவும் நடப்பதற்கு கடவுள் அனுமதித்தால், அதை ஏன் அவர் அனுமதித்தார் என்பதை அறிந்திருக்கிறார். நாமும் அதை அறிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையினராகிய நாங்கள், விசுவாசத்தை வேறு எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது, விட்டுக்கொடுத்தலே கிடையாது என்பதில் உறுதியாய் உள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் மே 24ம் தேதி, உரோமையில், எம் ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகளுக்கு அளிக்கும் இனிய வரவேற்புக்கும், மெய்யியலாளராகிய, புனித கான்ஸ்ட்டைன் சிரில் அவர்களின் கல்லறையில் திருவழிபாடு நடத்தவும், கிறிஸ்துவை அன்புகூரும், பக்தியுள்ள பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் மக்களுக்காக அவரின் பரிந்துரையை மன்றாடவும், அனுமதிப்பதற்கு நன்றி. எம் தாயகத்தில் தாங்கள் இருக்கும் நாள்கள் இனியவையாக அமையட்டும். இவ்வாறு வாழ்த்தி, தனது உரையை நிறைவு செய்தார், முதுபெரும்தந்தை Neofit.

கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள பால்கன் நாடாகிய பல்கேரியா, மலைகளையும், டான்யூப் நதி உட்பட ஆறுகளையும், கிரேக்க, ஸ்லாவிய, ஒட்டமான் மற்றும் பெர்சிய கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. இந்நாடு, நடனம், இசை, மரபு ஆடைகள், கைவினைப்பொருள்கள் போன்றவற்றிற்கும் பெயர்போனது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் ஏழை நாடான பல்கேரிய மக்களின் எதிர்பார்ப்புக்களை, திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் நிறைவேற்றும் என நம்புவோம். அதற்காகச் செபிப்போம்.

05 May 2019, 13:45