தேடுதல்

Vatican News
பாலியல் கொடுமைகள் குறித்த கருத்தரங்கில் திருத்தந்தை பாலியல் கொடுமைகள் குறித்த கருத்தரங்கில் திருத்தந்தை 

பாலியல் கொடுமையைக் களைய, திருத்தந்தையின் திருத்தூது மடல்

பாலியல் கொடுமைகள் இனி ஒருபோதும் நிகழாமல் இருப்பதற்கு, தொடர்ந்த, ஆழமான மனமாற்றமும், அதனை உறுதி செய்யும் வழிமுறைகளும் தேவைப்படுகின்றன – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது" (மத். 5:14) இச்சொற்கள் வழியே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரையும், புனிதத்தின் ஒளிர்விடும் எடுத்துக்காட்டுகளாக வாழும்படி அழைத்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 9, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஒரு திருத்தூது மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'Vos estis lux mundi' அதாவது, 'நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்ற தலைப்பில், திருத்தந்தை, தன் சுய விருப்பமான, “Motu Proprio” வடிவில் உருவாக்கியுள்ள  திருத்தூது மடல், பாலியல் கொடுமைகளை திருஅவையிலிருந்து நீக்கும் முயற்சிகளை தெளிவுபடுத்த வெளியிடப்பட்டுள்ளது.

ஆழமான மனமாற்றம் தேவை

பாலியல் கொடுமைகள் இனி ஒருபோதும் நிகழாமல் இருப்பதற்கு, தொடர்ந்த, ஆழமான மனமாற்றமும், அதனை உறுதி செய்யும் வழிமுறைகளும் தேவைப்படுகின்றன என்றும், இதற்கு, ஒவ்வொருவரும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் திருத்தந்தை, இம்மடலின் அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஒரு முயற்சி, தூய ஆவியார், நம் உள்ளங்களில் பொழியப்படுவதால் மட்டுமே உறுதி செய்யப்படும், என்பதையும், "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" (யோவான் 15:5) என்று இயேசு கூறியள்ளதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை நினைவுறுத்தியுள்ளார்.

ஆயர்களின் கூடுதல் பொறுப்பு

பாலியல் கொடுமையைக் களையும் பெரும் பொறுப்பு, திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான ஆயர்களையே பெரிதும் சாரும் என்பதை வலியுறுத்திக் கூற, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 'Lumen Gentium' திருஅவைக் கோட்பாட்டின் 27ம் எண்ணை, ஒரு மேற்கோளாகக் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அறிமுகப் பகுதியைத் தொடர்ந்து, பொதுவான விதிமுறைகள், (General Provisions) மற்றும், ஆயர்களுக்கும் அவர்களுக்கு இணையானவர்களுக்கும் உரித்தான விதிமுறைகள் (Provisions concerning Bishops and their equivalents) என்ற இரு பிரிவுகளில் 19 விதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

பொதுவான விதிமுறைகள்

தான் வெளியிடும் விதிமுறைகள், அருள்பணியாளர்கள் மற்றும் அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டோருக்கு விதிக்கப்படுகின்றன என்பதை, முதல் விதிமுறையில் கூறும் திருத்தந்தை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், மற்றும், உடலளவிலும், மனதளவிலும் முடிவுகள் எடுக்க இயலாத நலிவுற்றோர் ஆகியோருக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளையும், குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள், காணொளிகளையும் இந்த விதிமுறைகள் உள்ளடக்கியுள்ளன என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அருள்பணி பயிற்சியில் அல்லது துறவு வாழ்வின் பயிற்சியில் இருப்போரை, பாலியல் வழியில் கொடுமைப்படுத்துவதும் இப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, எவ்வழிகளில் புகார் அளிப்பது, புகார் அளிப்பவரின் அடையாளத்தை எவ்வாறு பாதுகாப்பது, மற்றும், இக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படவேண்டிய பராமரிப்பு ஆகியவை குறித்து முதல் பிரிவில் 5 விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயர்களுக்கு விதிமுறைகள்

ஆயர்களுக்கும் அவர்களுக்கு இணையானவர்களுக்கும் உரித்தான விதிமுறைகள் என்ற இரண்டாம் பிரிவில், இவ்விதிமுறைகள் யார், யாரை உள்ளடக்கும் என்பதை விளக்கும்வண்ணம், தற்போது பணியில் ஈடுபட்டுள்ள, மற்றும் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கர்தினால்கள், ஆயர்கள், மற்றும் திருத்தந்தையின் பிரதிநிதிகள், அருள்பணியாளர்கள், துறவிகள் ஆகிய அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாலியல் கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் நேரடியான பணி, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தைச் சார்ந்ததெனினும், தவறிழைத்தவர் யார் என்பதைப் பொருத்து, கீழை வழிபாட்டு முறை பேராயம், ஆயர்களின் பேராயம், நற்செய்தி அறிவிப்பு பேராயம், அருள்பணியாளர்கள் பேராயம் மற்றும் துறவியர் பேராயம் ஆகியவை குற்றச்சாட்டுகளைப் பெறலாம் என்று, 7ம் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் பிரிவில் கூறப்பட்டுள்ள 14 விதிமுறைகளில், ஆயர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள், விசாரணை நடைபெறவேண்டிய வழிமுறைகள், இந்த விவகாரத்தில் தகுந்த திறமை கொண்டோரின் உதவியை நாடுதல், விசாரணை நீடிக்கவேண்டிய கால அளவு, கடைபிடிக்கப்படவேண்டிய பாதுகாப்பு வழிகள், வத்திக்கானுக்கு அறிக்கை சமர்ப்பித்தல் என்ற பல்வேறு விதிமுறைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல்...

தான் வழங்கியுள்ள விதிமுறைகள், 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த விதிமுறைகள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு சோதனை முயற்சியாக நடைமுறையில் இருக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலின் இறுதியில் கூறியுள்ளார்.

09 May 2019, 15:07