தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன், 'போஸே' துறவு மடத்தின் தலைவரான அருள் சகோதரர், என்சோ பியாங்கி - கோப்புப் படம்  திருத்தந்தையுடன், 'போஸே' துறவு மடத்தின் தலைவரான அருள் சகோதரர், என்சோ பியாங்கி - கோப்புப் படம்  

'போஸே' துறவு மடத்திற்கு திருத்தந்தையின் செய்தி

நமது திருவழிபாடுகளைக் குறித்த தெளிவான புரிதல், விவிலியத்தின் துணைகொண்டு உருவாகவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும், திருஅவையின் வாழ்வும் உடன்பிறந்த உணர்வால் நிறைவதற்கு உதவும் நமது திருவழிபாடுகளைக் குறித்த தெளிவான புரிதல், விவிலியத்தின் துணைகொண்டு உருவாகவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'போஸே' துறவு மடத்தின் தலைவருக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

இத்தாலியின் போஸே எனுமிடத்தில் அமைந்துள்ள ஆழ்நிலை தியான துறவு மடத்தில், "பலிபீடம், அண்மைய கையகப்படுத்தல்களும், புதிய பிரச்சனைகளும்" என்ற தலைப்பில், மே 30, இவ்வியாழன் முதல், ஜூன் 1, இச்சனிக்கிழமை முடிய நடைபெறும் ஒரு பன்னாட்டு திருவழிபாட்டு கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

இத்துறவு மடத்தின் தலைவரான அருள் சகோதரர், என்சோ பியாங்கி (Enzo Bianchi) அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திருத்தந்தையின் பெயரால், அனுப்பியுள்ள இச்செய்தி, இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் இவ்வியாழன் காலையில் வாசிக்கப்பட்டது.

திருவழிபாட்டை மையப்படுத்தி நடைபெறும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கை, போஸே துறவு மடமும், இத்தாலிய ஆயர் பேரவையின் வழிபாட்டு, கலாச்சாரப் பணிக்குழுவும் ஏற்பாடு செய்துள்ளன.

30 May 2019, 14:25