தேடுதல்

Vatican News
இரு புதிய அருள் பணியாளர்களுடன் ஆசீர் வழங்கிய திருத்தந்தை இரு புதிய அருள் பணியாளர்களுடன் ஆசீர் வழங்கிய திருத்தந்தை  (ANSA)

இயேசுவுடன் நம் நெருக்கம், மகிழ்வை வழங்குகிறது

திருத்தந்தை : நல்லாயருடன் நாம் கொண்டிருக்கும் நெருக்கம், நமக்கு மகிழ்வை வழங்குவதுடன், முடிவற்ற வாழ்வின் முழுமையை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மை அறிந்து நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கும் நல்லாயன் இயேசுவே என இந்த நல்லாயன் ஞாயிறன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மந்தையாகிய நாம், அவரின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க முன்வரவேண்டும், அவரும் தன் அன்பினால் நம் இதயங்களின் நேர்மைத் தன்மையை ஆய்வு செய்வார் என்றார் திருத்தந்தை.

நல்லாயனுடன் நாம் கொண்டிருக்கும் நெருக்கம், நமக்கு மகிழ்வை வழங்குவதுடன், முடிவற்ற வாழ்வின் முழுமையை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது எனவும்  எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மீது அக்கறை கொண்டவராக, நம்மைத்தேடி வந்து  அன்புகூரும் இறைவன், நம்முடைய தோல்விகளையும் ஏமாற்றங்களையும் தெரிந்தவராக, நம் இதயத்திற்கு தன் வார்த்தைகளைத் தருகிறார் எனவும் கூறிய திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கவனமுடன் செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்காக அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

12 May 2019, 12:42