தேடுதல்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் பசிலிக்கா அசிசி நகர் புனித பிரான்சிஸ் பசிலிக்கா 

இளம் பொருளாதார நிபுணர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

“பிரான்சிஸ் பொருளாதாரம்” என்ற தலைப்பில், 2020ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, அசிசி நகரில், இளம் பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவர்களுக்கு கூட்டம் நடைபெறும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் அசிசி நகரில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, உலகளாவிய இளம் பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகளாவிய இளம் பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவர்களுக்கென, மே 11, இச்சனிக்கிழமையன்று மடல் ஒன்றை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரணத்தை அல்ல, மாறாக, வாழ்வை வழங்கும் ஒரு வித்தியாசமான பொருளாதாரத்தில் ஆர்வமுள்ள இளம் பொருளாதார நிபுணர்களைத் தான் சந்திப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புறக்கணிப்பை அல்ல, எல்லாரையும் சேர்க்கின்ற, மனிதமற்ற அல்ல, மாறாக மனிதம் நிறைந்த, சுற்றுச்சூழலைச் சேதப்படுத்துவது அல்ல, மாறாக, அதனைப் பாதுகாக்கின்ற ஒரு மாறுபட்ட பொருளாதாரத்தில் ஆர்வமுள்ள இளம் தொழில்முனைவர்களும், பொருளாதார நிபுணர்களும் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கும் ஒரு நிகழ்வாக அது அமையும்  என்று, திருத்தந்தையின் கடிதம் கூறுகின்றது.

“பிரான்சிஸ் பொருளாதாரம்” என்ற தலைப்பில், 2020ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, அசிசி நகரில், இந்நிகழ்வு நடைபெறும்.

பொருளாதாரத்திற்குப் புத்துயிர்

உலகளாவியப் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெறச்செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், உடன்பிறந்த உணர்வின் மனிதப்பண்பின் அடையாளமாக விளங்கும் அசிசி நகர், இதற்குரிய நிகழ்வை நடத்துவதற்குச் சரியான இடம் என்றும், தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அசிசி நகரை, அமைதிக் கலாச்சாரத்தின் குறியீட்டாகத் தேர்ந்தெடுத்தார், புதிய பொருளாதார அமைப்பை ஊக்குவிப்பதற்கு, அசிசி நகரே சரியான இடம் என, தனக்கும் தோன்றுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வும், கண்ணோட்டமும், இக்காலத்திற்கேற்றவை, அவை, நம் வருங்காலத்திற்கு நம்பிக்கையை அளிக்கும், ஏழைகளிலும் மிக ஏழைகளுக்கு மட்டுமல்லாமல், நம் முழு மனிதக் குடும்பத்திற்குமே பலனளிக்கும் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை 

பூமிக்கோளத்தைப் பாதுகாத்தலும், சமுதாய நீதியும்

பூமிக்கோளத்தைப் பாதுகாத்தலும், சமுதாய நீதியும் ஒன்றையொன்று மிக ஆழ்ந்தமுறையில் சார்ந்துள்ளன என்பதையும், அவை, பொருளாதாரத்தின் அமைப்புமுறை பிரச்சனைகளுக்கு, தீர்வுகளைக் காண முடியும் என்பதையும், தனது ‘Laudato Sì’ திருமடலில் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல், வாழ்வுக்குத் திறந்தமனம், குடும்பம் மீது அக்கறை, சமுதாய சமத்துவம், தொழிலாளரின் மாண்பு, வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகள் போன்றவற்றை மதிப்பதற்கு உறுதி வழங்கத் திறனற்று உள்ள பொருளாதாரத்தைச் சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இளையோர் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்

தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய காரணிகளாக இளையோர் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, பல்கலைக்கழகங்கள், வர்த்தகங்கள், மற்றும் அமைப்புகள், வீணாக்கும் கலாச்சாரத்திற்கெதிராய்ச் செயல்படுவதாய், பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் புரிந்துகொள்வதற்குப் புதிய வழிகளை உருவாக்கும், நம்பிக்கைப் பணிமனைகளாக இருப்பதாய் அமைய, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இளையோரிடம் கூறியுள்ளார்.

புனித பிரான்சிஸ் அசிசியார் தொடர்ந்து உள்தூண்டுதல் அளிப்பவராய் இருக்கிறார்,  உலக அளவில் சிறந்த பொருளாதார நிபணர்களாக, மற்றும் தொழில்முனைவோராக ஏற்கனவே பணியாற்றி வருபவர்கள், இந்த கருத்தாக்கங்களோடு எல்லாருக்கும் உரிய, உறுதியான பொருளாதாரத்தை உருவாக்குமாறு, இளம் பொருளாதார நிபணர்கள் மற்றும் தொழில்முனைவோர் வழியாக அழைப்பு விடுக்கிறேன் என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2019, 15:53