தேடுதல்

Vatican News
ரகோவ்ஸ்கி நகர் திரு இருதய ஆலயத்தில் முதல் திருவிருந்து விழா திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் ரகோவ்ஸ்கி நகர் திரு இருதய ஆலயத்தில் முதல் திருவிருந்து விழா திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் 

முதல் நற்கருணை விருந்து திருப்பலியில் மறையுரை

ஒரு குழந்தை தந்த ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும், இயேசுவின் புதுமையை ஆரம்பித்துவைத்தன. அந்தக் குழந்தையைப்போல், இன்று, நீங்கள், ஒரு புதுமை நிகழ்வதற்கு உதவி செய்துள்ளீர்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, தங்கள் முதல் நற்கருணை விருந்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் இளம் சிறுவர், சிறுமியரையும், அவர்களின் பெற்றோர், உற்றார், நண்பர்களையும், வாழ்த்துகிறேன். "கிறிஸ்து உயிர்த்துவிட்டார்!" என்று இந்நாட்டவர் பகிர்ந்துகொள்ளும் வாழ்த்துக்களை உங்களுக்கு நானும் கூற விழைகிறேன். கிறிஸ்துவர்களின் மகிழ்வை வெளிப்படுத்தும் ஓர் அற்புத வாழ்த்து இது.

அன்பு சிறுவர், சிறுமியரே, இயேசுவை, நற்கருணை விருந்தின் வழியே முதல் முதலாகச் சந்திக்க வந்திருக்கும் நீங்கள், இந்நாளை ஒருபோதும் மறக்கமாட்டீர்கள். நீண்ட காலத்திற்கு முன் வாழ்ந்த இயேசுவை இப்போது எப்படி சந்திக்க முடியும் என்ற கேள்வி எழலாம். நீண்ட காலத்திற்கு முன் அவர் வாழ்ந்ததுபோலவே, இன்றும், நம்முடன் வாழ்கிறார். அவரை, திருப்பலியில் ஒவ்வொருநாளும் நாம் சந்திக்கமுடியும்.

முதல் நற்கருணை விருந்து, ஒரு விழாதான்

ஒரு விழாவுக்குத் தேவையான முறையில் நீங்கள் உடுத்தியிருக்கிறீர்கள்! ஆம், முதல் நற்கருணை விருந்து, ஒரு விழாதான். நம்மோடு இயேசு எப்போதும் தங்கியுள்ளார் என்பதைக் கொண்டாடும் விழா இது. நமது பெற்றோர், தாத்தா, பாட்டி, மற்றும் நம் உறவினர்கள், இந்த விழாவைக் கொண்டாட உதவி செய்துள்ளனர்.

நீங்கள் நீண்டதூரம் பயணம் செய்து ரகோவ்ஸ்கி (Rakovski) நகருக்கு வந்திருக்கிறீர்கள். இதுவரை, உங்களோடு வழிநடந்த அருள்பணியாளர்களும், மறைக்கல்வி ஆசிரியர்களும் இன்று இயேசுவைச் சந்திக்க உங்களை அழைத்து வந்துள்ளனர்.

குழந்தை ஆரம்பித்து வைத்த புதுமை

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசு பலுகச்செய்த புதுமையை, இன்றைய நற்செய்தியில் (யோவான் 6:1-15) கேட்டோம். இந்தப் புதுமை எப்படி ஆரம்பமானது என்பதை கவனித்தீர்களா? ஒரு குழந்தை தந்த ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இந்தப் புதுமையை ஆரம்பித்துவைத்தன. அந்தக் குழந்தையைப்போல், இன்று, நீங்கள் ஒரு புதுமை நிகழ்வதற்கு உதவி செய்துள்ளீர்கள். வயதில் மூத்த நாங்கள் அனைவரும், இயேசுவை முதன்முதலாக சந்தித்த முதல் நற்கருணை விருந்தை நினைவுகூரும் புதுமை நிகழ்வதற்கு உதவி செய்துள்ளீர்கள்.

குழந்தை உள்ளம்... புதுமைகளுக்கு வழி

உங்களைப்போல், பகிர்ந்து வாழும், கனவு காணும், நம்பிக்கை கொள்ளும், பிறரை மதிக்கும், உள்ளம் கொண்டிருந்தால் மட்டுமே, ஒரு சில புதுமைகள் நிகழும். உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு, இறைவனின் மகிழ்வைக் கொணர்வதற்கு, இறைவன் உங்கள் உதவியை நாடுகிறார்.

அன்பு சிறுவர், சிறுமியரே, இந்த பெரும் தருணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்வடைகிறேன். இன்று நீங்கள் உணரும் இதே ஆர்வத்துடன், மகிழ்வுடன் எப்போதும் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் முதல் நற்கருணை விருந்து, கடைசி விருந்து அல்ல! உங்களுக்காக இயேசு எப்போதும் காத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகிழ்வுடன், நன்றியுடன், நீங்கள் பெறவிருக்கும் பல நற்கருணை விருந்துக்களுக்கு, இன்று ஆரம்பமாக அமையட்டும்.

06 May 2019, 12:16