தேடுதல்

Vatican News
திருத்தந்தை நிறைவேற்றிய குருத்துவ திருநிலைப்பாட்டு திருப்பலி திருத்தந்தை நிறைவேற்றிய குருத்துவ திருநிலைப்பாட்டு திருப்பலி  (ANSA)

மே, ஜூன் மாதங்களில், திருத்தந்தையின் நிகழ்வுகள்

மே, ஜூன் மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையற்று நடத்தும் திருவழிபாடுகள், மற்றும் பயணங்கள் ஆகியவற்றின் கால அட்டவணை வெளியானது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே மற்றும் ஜூன் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவழிபாடுகள், மற்றும் அவர் மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய ஒரு கால அட்டவணை, மே 2, இவ்வியாழனன்று வெளியானது.

மே 5, வருகிற ஞாயிறு முதல், 7, செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா, மற்றும், வட மாசிடோனியா ஆகிய நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்.

மே 12, நல்லாயன் ஞாயிறு என்றழைக்கப்படும், உயிர்ப்புக் காலத்தின் நான்காம் ஞாயிறன்று காலை 9.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில், உரோம் மறைமாவட்டம், மற்றும், உலகின் ஒரு சில நாடுகளை சேர்ந்த குரு மாணவர்களை, அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்துகிறார்.

மே மாதத்தின் இறுதிநாள் 31ம் தேதி, ரொமேனியா நாட்டுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தை, ஜூன் 2, ஞாயிறன்று நிறைவு செய்கிறார்.

பெந்தக்கோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவான ஜூன் 9, ஞாயிறு காலை, 10.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கடுத்த மூவொரு இறைவன் ஞாயிறன்று, இத்தாலியின் காமெரீனோ (Camerino) மறைமாவட்டத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார்.

ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று காலை 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர்களுக்கு வழங்கப்படும் பாலியம் என்ற கழுத்துப்பட்டைகளை அர்ச்சிக்கிறார்.

02 May 2019, 15:02