தேடுதல்

Vatican News
அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு  (Vatican Media)

பல்கேரிய அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு

சோஃபியா புனித அலெக்சாந்தர் நெவிஸ்கி பேராலயம் - ஒட்டமான்கள் ஆதிக்கத்திலிருந்து ஸ்லாவிய மக்களை விடுவிப்பதற்காக, துருக்கியர்களுக்கு எதிராக, 1877, 1878ம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் உயிரிழந்த 2 இலட்சம் இரஷ்யப் படைவீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பல்கேரிய அரசுத்தலைவர் Rumen Radev அவர்கள், அம்மாளிகையின் முகப்பிலேயே, திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அந்த மாளிகையில், இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டன. அரசுத்தலைவர் Radev அவர்களும், திருத்தந்தையும் தனியே கலந்துரையாடினர். பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், பேராயராக (ஆஞ்சலோ ரொன்காலி)  இருந்த சமயம், 1931ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, பல்கேரியாவுக்குத் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆவணத்தின் நகல் ஒன்றை,  அரசுத்தலைவர்க்கு அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இது, வத்திக்கான் இரகசிய பதிவேடுகளிலிருந்து எடுக்கப்பட்டது.

பல்கேரிய அரசுத்தலைவரைச் சந்தித்த பின்னர், அந்த மாளிகையின் முன்புறமிருக்கின்ற அத்தனாஸ் புரோவ் வளாகத்தில், பல்கேரிய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், முதலில், அரசுத்தலைவர் Radev அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

அரசுத்தலைவரின் உரைக்குப் பின்னர், திருத்தந்தையும், அந்நாட்டுக்கு, தனது முதல் உரையை வழங்கினார். இந்நிகழ்வுக்குப் பின்னர், பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் பேரவையின் மாளிகைக்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இம்மாளிகை, 1904க்கும், 1908ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. அம்மாளிகையில், ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை Neofit அவர்களையும், ஆர்த்தடாக்ஸ் பேரவையின் பிரதிநிதிகளையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பல்கேரிய மக்கள் தொகையில், 76 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் முதலில், முதுபெரும்தந்தை Neofit அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். முதுபெரும்தந்தை Neofit அவர்களின் வரவேற்புரைக்குப் பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். புனித பவுல் அவர்கள் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட அழகான படம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.    

புனித அலெக்சாந்தர் நெவிஸ்கி பேராலயம்

இச்சந்திப்பை நிறைவு செய்து, பல்கேரிய முதுபெரும்தந்தையின் புனித அலெக்சாந்தர் நெவிஸ்கி பேராலயம் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒட்டமான்கள் ஆதிக்கத்திலிருந்து ஸ்லாவிய மக்களை விடுதலை செய்வதற்காக, துருக்கியர்களுக்கு எதிராக, 1877, 1878ம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் உயிரிழந்த 2 இலட்சம் இரஷ்யப் படைவீரர்களின் நினைவாக இப்பேராலயம் எழுப்பப்பட்டது. இப்பேராலயத்தில், புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் திருவுருவங்களின் முன்னர் செபித்தார், திருத்தந்தை. பின்னர், அப்பேராலய வளாகத்தில் அல்லேலூயா வாழ்த்தொலி உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகள் பத்துப் பேரைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வை நிறைவுசெய்து, பல்கேரிய திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு மாலையில் முதலாம் Alexander Knyaz வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் சோஃபியாவில், முதல் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் முற்றுப்பெறும்.

05 May 2019, 13:55