தேடுதல்

Vatican News
ருமேனியா Sumuleu Ciuc திருத்தலத்தில் திருப்பயணிகள் ருமேனியா Sumuleu Ciuc திருத்தலத்தில் திருப்பயணிகள்  

திருத்தந்தையின் ருமேனியா திருத்தூதுப்பயணம், ஒரு முன்தூது

"நாம் இணைந்து நடைபயில்வோம்" என்ற விருதுவாக்குடன் நடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ருமேனியா திருத்தூதுப்பயணத்திற்காக (மே 31-ஜூன் 2), நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம்

மேரி தெரேசா - வத்திக்கான்

அழகும், வரவேற்கும் பண்பும் மிகுந்த ருமேனியாவிற்கு, உடன்பிறந்தோனாகவும், திருப்பயணியாகவும் வருகிறேன் என்றுரைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 31, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை 8.10 மணிக்கு, அந்நாட்டிற்கு தனது திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குகிறார். தென்கிழக்கு ஐரோப்பாவில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகவும், கத்தோலிக்கரைச் சிறுபான்மையாகவும் கொண்டிருக்கும் பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா குடியரசுகளுக்கு, இந்த மே 5ம் தேதி முதல், 7ம் தேதி வரை, திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று மீண்டும், தென்கிழக்கு ஐரோப்பாவில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற, மற்றுமொரு நாடாகிய ருமேனியாவிற்குச் செல்கிறார். ஜூன் 2ம் தேதி வரை திருத்தந்தை, திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்ற, ருமேனியாவில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் 87 விழுக்காடு, கத்தோலிக்கர் 7.3 விழுக்காடு மற்றும் ஏனைய மதத்தவர் 6 விழுக்காடாகும்.

ருமேனியா நாட்டின் அமைப்பு

ருமேனியா நாடு, மத்திய, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்நாடு, கருங்கடலுக்கு தென்கிழக்கே, தெற்கே பல்கேரியா, வடக்கே உக்ரைன், மேற்கே ஹங்கேரி, தென்மேற்கே செர்பியா, கிழக்கே மோல்டோவா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது. இது, ஐரோப்பிய ஒன்றியத்தில், பரப்பளவில் 12வது பெரிய நாடாகவும், மக்கள் தொகையில், ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ஏறத்தாழ 2 கோடி மக்கள் இந்நாட்டின் தலைநகரம் புக்காரெஸ்ட். இதற்கு அடுத்து, பெரிய நகரங்களாக, Cluj-Napoca, Timișoara, Iași, Constanța, Craiova, மற்றும் Brașov ஆகியவை அமைந்துள்ளன. ருமேனியா, 1944ம் ஆண்டில், சோவியத் படைகளால் ஆக்ரமிக்கப்பட்டு, 1948ம் ஆண்டில், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக மாறியது. அதிலிருந்து கம்யூனிச ஆட்சி இடம்பெற்ற இந்நாட்டில், 1989ம் ஆண்டில் இடம்பெற்ற கிளர்ச்சிக்குப் பின்னர், மக்களாட்சி மலர்ந்தது. அதற்குப் பின்னர், பொருளாதாரச் சந்தையிலும் இந்நாடு வளரத் தொடங்கியது. 1990ம் ஆண்டில் சுதந்திரத் தேர்தல்கள் நடைபெற்று, இறையாண்மை பெற்ற, வளரும் நாடுகளில் ஒன்றாக, இது விளங்கி வருகிறது. 2004ம் ஆண்டில், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புடனும், (NATO), 2007ம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் (EU) இணைந்தது ருமேனியா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் 52வது இடத்தையும், உள்நாட்டு உற்பத்தியில், உலகில் 47வது இடத்திலும் உள்ள ருமேனியா, 1955ம் ஆண்டிலிருந்து, ஐ.நா.வில் உறுப்பினராகவும் உள்ளது.  

ருமேனியா பெயர்

"ருமேனியா (Romania)" என்ற பெயர், உரோமைப் பேரரசின் குடிமகன் என்று பொருள்படும், "Romanus" என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 16ம் நூற்றாண்டில், டிரான்சில்வேனியா, மோல்டோவியா, மற்றும் Wallachia ஆகிய பகுதிகளுக்குச் சென்ற இத்தாலிய மனிதயியலாளர், இப்பெயர் சொல்லி முதலில் ருமேனியாவை, அழைத்துள்ளார். உரோமைப் பேரரசர் த்ராஜன் ஆட்சியில், கி.பி.105ம் ஆண்டில் ருமேனியாவின் தென் பகுதி ஆக்ரமிக்கப்பட்டது. கி.பி.271ம் ஆண்டில் உரோமைப் பேரரசர்

அவுரேலியுஸ் ஆட்சியில் உரோமையர்கள், ருமேனியப் பகுதியிலிருந்து ஆக்ரமிப்பை அகற்றினர். அதன்பின்னர், அங்கு வாழ்ந்த உரோமையர்களும், கருங்கடலுக்கு மேற்கே வாழ்ந்த Dacia இனத்தவரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்கினர். இதையடுத்து, ருமேனியா என்ற புதிய ஒரு நாடு உருவானது. எனவே, ருமேனியர்களில், உரோமையர்களின் இலத்தீன் மொழி கலாச்சாரமும், கிழக்கு ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை விசுவாசமும் கலந்து காணப்படுகின்றன. எனவே இந்நாட்டில், ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் உரோமையர் இனத்தவராகவும், எஞ்சியுள்ளவர்கள் ஹங்கேரி இனத்தவராகவும், இன்னும், ரோமா எனப்படும் ஜிப்சி இனத்தவரும், ஜெர்மானியர்களும் ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளனர். 1930ம் ஆண்டில், ஏறத்தாழ 3,42,000 ஜெர்மானியர்கள் ருமேனியாவில் வாழ்ந்துள்ளனர்.

ஆக்ரமிப்புகள்

5ம் நூற்றாண்டில் Huns இனத்தவர் இப்பகுதிக்கு வந்தது முதல், 14ம் நூற்றாண்டில், Walachia மற்றும் Moldaviaவில் கிளர்ச்சிகள் இடம்பெறும்வரையிலான ருமேனியா மக்கள் பற்றிய வரலாறு, பெரும்பாலும் எழுதப்படவில்லை. இந்தக் காலக்கட்டத்தில், இடம்பெற்ற பல்வேறு இனப் போராளிகளின் இடைவிடாத தாக்குதல்களை எதிர்க்க இயலாமல், இம்மக்கள் Carpathian மலைகளில் சென்று வாழ்ந்துள்ளனர். எனவே, ஏறத்தாழ 600 ஆண்டுகள், ருமேனிய நிலப்பகுதி, அண்டை நாடுகளுக்குப் போர்களமாகவே இருந்துள்ளது. முதலில் பைசான்டைன் பேரரசு, பின்னர் தற்போதைய இஸ்தான்புல் பகுதியிலிருந்து வந்த ஒட்டமான் பேரரசு, பின்னர் மேற்கிலிருந்து வந்த Habsburg பேரரசு, பின்னர் கிழக்கிலிருந்து வந்த இரஷ்யப் பேரரசு என, நாலா பக்கங்களிலிருந்தும் பேரரசுகளின் ஆக்ரமிப்புக்கு இந்நாடு உள்ளாகியுள்ளது. 1859ம் ஆண்டில், Walachia மற்றும் Moldaviaவின் டான்யூப் அரசர்களின் தனிப்பட்ட முயற்சி வழியாக, நவீன ருமேனியா உருவாக்கப்பட்டு, 1866ம் ஆண்டிலிருந்து ருமேனியா என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது. 1877ம் ஆண்டில், ஒட்டமான் பேரரசிடமிருந்து இது விடுதலையும் பெற்றது. தற்போது ருமேனியா அமைந்துள்ள பகுதியில், ஏறத்தாழ நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதர் வாழ்ந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 800க்கும் அதிகமான ஏக்கர் நிலபரப்பில், நகரங்கள் போன்று அமைத்து அம்மக்கள் வாழ்ந்துள்ளனர். உலோக கால சமுதாயங்களின் இராணுவப் பண்புகளைக் கொண்டு, ஏறத்தாழ கி.மு.1800ம் ஆண்டில், அரண்கள் அமைத்து அவர்கள் வாழ்ந்துள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டில், கருங்கடல் பகுதியில், அமைக்கப்பட்ட கிரேக்க காலனிகள், உள்ளூர் இன மக்களுடன் வர்த்தகம் செய்வதற்கு முக்கியமான மையங்களாக மாறியுள்ளன.

புவியியல், இயற்கை வளம்

ருமேனியாவின் மூன்றில் ஒரு பகுதி மலைகளாகவும், நான்கில் ஒரு பகுதி காடுகளாகவும், ஏனைய பகுதிகள் குன்றுகள் மற்றும் சமவெளிப் பகுதியாகவும் அமைந்துள்ளன. இந்நாட்டின் மையப் பகுதியில், Carpathian மலைகள், 14 மலைத்தொடர்களாக, 2000 மீட்டர் முதல், 2,544 மீட்டர் வரை உயரத்தைக் கொண்டுள்ளன. மலைப்பகுதிகளில் வேளாண்மை தொழில் நடைபெறுகின்றது. இத்தொழிலே பாரம்பரியமாக, ருமேனியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து வருகிறது. திராட்சை, ஓர்க்கேதெ மலர்ச் செடிகள், காய்கறித் தோட்டங்கள் உட்பட, அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான நிலப்பகுதி, வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை வளங்களால் நிறைந்துள்ள ருமேனியாவின் மூன்றில் இரண்டு பகுதியில், ஹைட்ரோ கார்பன் உள்ளது. 19ம் நூற்றாண்டிலிருந்து பெட்ரோலிய தொழிற்சாலைகளும் வளமையாக நடைபெற்று வருகின்றன. இயற்கை எரிவாயு, மீத்தேன் வாயு போன்றவை இந்நாட்டில் அதிகமாக உள்ளன. இங்கு, கி.மு. 6050 மற்றும் 5,900மாம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலேயே, உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 400 வகையான பாலூட்டிகளும், அரியவகை விலங்குகளும், பல்வேறு வகையான பாடும் பறவைகளும், ஏறத்தாழ 3,700 தாவர வகைகளும் இந்நாட்டில் உள்ளன. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நதியான, டான்யூப், ஜெர்மனியின் கறுப்பு வனம் வழியாக, ருமேனியாவில் பாய்ந்தோடுகின்றது. இந்நாட்டிற்கு வளம் சேர்க்கின்ற இந்நதியின் படுகை, நூற்றுக்கணக்கான பறவையினங்களின் சரணாலயமாக அமைந்துள்ளது.   

கிறிஸ்தவம்

ருமேனியாவில், கிறிஸ்தவத்தின் வரலாறு, உரோமைப் பேரரசின் மாநிலமாக அமைந்திருந்த Lower Moesiaவிலிருந்து ஆரம்பிக்கிறது. இங்குதான் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பல கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தின் வரலாறு, கி.பி.105ம் ஆண்டில் உரோமைப் பேரரசர் Trajanடமிருந்து, Dacia இனத்தவர் ருமேனியப் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து துவங்குகிறது. திருத்தூதரான அந்திரேயா அவர்கள், இந்நாட்டில், தற்போதைய கருங்கடல் பகுதியில் நற்செய்தி அறிவித்தார் என பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்றது. 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் இடம்பெற்ற பெரிய பிரிவினைக்குப் பின், இப்பகுதி ஆர்த்தடாக்ஸ் சபையிடம் சென்றது. இந்நாட்டிலுள்ள ஏறத்தாழ 2 கோடிப் பேரில், 7.3 விழுக்காட்டினர் மட்டுமே கத்தோலிக்கர்.

1927ம்ஆண்டில் திருப்பீடத்திறகும், ருமேனியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் கையெழுத்தாகின. ஆனால், 2ம் உலகப் போரின் இறுதியில் சோவியத் படைகள் இந்நாட்டில் நுழைந்த பின்னர், கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தது. கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் சித்ரவதைக்கு உள்ளாகினர். 1948ம் ஆண்டில் சோவியத் அதிபர், ஸ்டாலின் இக்கத்தோலிக்கரை சட்டத்திற்குப் புறம்பாக்கி, அனைவரும் ஆர்த்தடாக்ஸ் சபையில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த கத்தோலிக்க ஆயர்களும்,  600 அருள்பணியாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். ஆலயங்கள், துறவு இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லறைகள் சிதைக்கப்பட்டன. இந்த அடக்குமுறையில் சித்ரவதைக்கு உள்ளான ஆயர் Vladimir Ghika (1873-1952) அவர்கள், 2013ம் ஆண்டிலும், ஆயர் Anton Durcovici அவர்கள், 2014ம் ஆண்டிலும் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இன்னும் சிலரை, இத்திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருளாளர்களாக அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தில், மதத்தவரை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான ருமேனியாவில், ஏறத்தாழ 92 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். தற்போது ருமேனியா நாடு சமயச் சார்பற்றது. அரசு மதம் என்று எதுவும் இல்லை. இந்நாட்டில், 18, மதங்கள் மற்றும், சமயப் பிரிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, யூதர்கள் 3,500, கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஏறத்தாழ 21 ஆயிரம், மற்றும் எம்மதத்தையும் சாராதவர் 19 ஆயிரம் பேரும், இந்நாட்டில் வாழ்கின்றனர்.    

கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபையினர் அதிகமாக வாழ்கின்ற ருமேனியாவுக்கு, 1999ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். தற்போது இருபது ஆண்டுகள் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முப்பதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாக, இவ்வெள்ளியன்று ருமேனியாவுக்குச் செல்கிறார். நம்மைப் பிரித்துவைக்கும் வேலிகளை அகற்றி, இணைந்து நடைபயின்று, நம் கிறிஸ்தவ குடும்பத்தின் பாரம்பரியத்தை வளர்ப்பதற்கு, இப்பயணம் துணைபுரியும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். "நாம் இணைந்து நடைபயில்வோம்" என்ற விருதுவாக்குடன் நடைபெறும் இத்திருத்தூதுப்பயணத்திற்காக, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம்

30 May 2019, 14:07