தேடுதல்

Vatican News
விமானப் பயணத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் விமானப் பயணத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

விமானத்தில் செய்தியாளர்களுக்கு வாழ்த்து

திருத்தந்தையே, பல்கேரியத் திருத்தூதுப் பயணம், இவ்வாண்டில், தாங்கள் மேற்கொள்ளும், நான்காவது திருத்தூதுப் பயணம். அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, தற்போது நான்காவது கண்டமாக, ஐரோப்பாவிற்குச் செல்கிறீர்கள் - ஜிசோத்தி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சோஃபியா நோக்கி ஆல் இத்தாலியா விமானம் பறக்கத் தொடங்கியவுடன், திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், விமானத்தில் பயணம் செய்யும் பன்னாட்டு செய்தியாளர்கள் சார்பாக திருத்தந்தைக்கு காலை வணக்கம் சொல்லி வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையே, இது, இந்த ஆண்டில், தாங்கள் மேற்கொள்ளும், நான்காவது திருத்தூதுப் பயணம். அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, தற்போது நான்காவது கண்டமாக, ஐரோப்பாவிற்குச் செல்கிறீர்கள். திருத்தந்தையரின் திருத்தூதுப் பயணங்களில் செய்தியாளராக, நூறாவது முறையாக, போர்த்துக்கீசிய Reinassenca வானொலிச் செய்தியாளர் Aura Miguel அவர்கள், தற்போது நம் அனைவரோடும் பயணம் மேற்கொள்கிறார் என, அந்தச் செய்தியாளரை, திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தினார் ஜிசோத்தி. அந்தச் செய்தியாளரின் பெயரைச் சொன்னவுடனேயே, போர்த்துக்கீசியரா? எனத் திருத்தந்தை கேட்க, செய்தியாளர்கள் எல்லாரும் மகிழ்ச்சியால் ஆரவாரித்தனர். பல்கேரியச் செய்தியாளர்கள், அந்நாட்டின் தேசிய கால்பந்து குழுவின், எண் 3 என குறியிடப்பட்ட, வீடற்றவரின் சட்டை ஒன்றை, திருத்தந்தைக்கு அன்பளிப்பாக அளித்தனர். அச்சட்டையில், ‘நம்பிக்கையின் குழு, பல்கேரியா, பிரான்செஸ்கோ’ என எழுதப்பட்டிருந்தது. மேலும், பல்கேரிய தொலைக்காட்சி பழங்கால முத்திரை ஒன்றை திருத்தந்தை வழங்கியது. ஏனைய செய்தியாளர்கள், தங்கள் பிள்ளைகள் அனுப்பிய செய்திகள் மற்றும் ஓவியங்களையும், சீனா பற்றிய ஒரு நூல் ஒன்றையும் திருத்தந்தைக்கு அன்பளிப்பாக அளித்தனர். திருத்தந்தை அனைத்துச் செய்தியாளர்களுக்கு நன்றி கூறினார். இப்பயணம் மிகவும் குறுகியது, மூன்று நாள்களைக் கொண்டது, ஆயினும், இதற்குத் தயாரித்தவர்கள், நிறைய நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளனர் என்று சொல்லி, செய்தியாளர்கள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வாழ்த்தினார்.

05 May 2019, 13:52