தேடுதல்

Vatican News
பாப்பிறை அறக்கட்டளைக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் பாப்பிறை அறக்கட்டளைக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

வறுமை நிலவும் இவ்வுலகில் நம்பிக்கையை விதையுங்கள்

பாப்பிறை அறக்கட்டளை உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, மனிதக் குடும்பத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பற்கு, திருஅவைக்குத் தளராது உதவி வருகின்றது என, திருத்தந்தை பாராட்டினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் ஒன்றிப்பைக் கட்டியெழுப்புவதையும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்கின்ற நம் சகோதரர், சகோதரிகளுக்குத் தேவையான பிறரன்புப் பணிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் பாப்பிறை அறக்கட்டளைக்கு, தனது நன்றியைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு ஒவ்வோர் ஆண்டும், திருப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பாப்பிறை அறக்கட்டளையின் உறுப்பினர்களை, மே 10, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்வு, அந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரையும் நிறைக்கட்டும் என வாழ்த்தினார்.

வன்முறை மற்றும் போர்களும், பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமையும் நிலவும் இவ்வுலகில், இந்த அறக்கட்டளையின், அர்ப்பணம் மற்றும் தாராள உள்ளத்தால் பயன்பெறும் எல்லாருக்கும், நம்பிக்கையும், இரக்கமும் நிறைந்த நற்செய்தி கிடைக்கின்றது என்றும், திருத்தந்தை பாராட்டி, நன்றி தெரிவித்தார்.  

இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு கல்வி, பிறரன்பு மற்றும் திருத்தூது திட்டங்கள் வழியாக, அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதையும், மனிதக் குடும்பத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பற்கு, திருஅவைக்குத் தளராது உதவி வருவதையும் திருத்தந்தை குறிப்பிட்டு, ஊக்குவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு பொதுநிலையினர் மற்றும் துறவறத்தாரால் வழிநடத்தப்படும் பாப்பிறை அறக்கட்டளை, 1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து திருத்தந்தையரின் மறைப்பணிகளுக்கு நிதி உதவி செய்துவரும் அந்த அறக்கட்டளை, ஏழு கோடி டாலர்களுக்கு மேற்பட்ட நிதியை, பல்வேறு மனிதநலத் திட்டங்கள் மற்றும் கல்விக்கென வழங்கியுள்ளது.

10 May 2019, 16:07