தேடுதல்

Vatican News
போலந்து, மற்றும் வத்திக்கானுக்கிடையே அரசு சார்ந்த உறவின் நூறாமாண்டு நினைவு தபால்தலை வெளியீடு போலந்து, மற்றும் வத்திக்கானுக்கிடையே அரசு சார்ந்த உறவின் நூறாமாண்டு நினைவு தபால்தலை வெளியீடு 

வத்திக்கான் – போலந்து உறவின் 100ம் ஆண்டு நினைவு

போலந்து, மற்றும் வத்திக்கான் நாடுகளுக்கிடையே அரசு சார்ந்த உறவு உருவாக்கப்பட்டதன் நூறாமாண்டு நினைவையொட்டி, இரு நாடுகளும் இணைந்து, தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போலந்து, மற்றும் வத்திக்கான் நாடுகளுக்கிடையே அரசு சார்ந்த உறவு உருவாக்கப்பட்டதன் நூறாமாண்டு நினைவையொட்டி, இரு நாடுகளும் இணைந்து, தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளன.

1919ம் ஆண்டு, மார்ச் 30ம் தேதி இவ்விரு நாடுகளுக்குமிடையே அரசு சார்ந்த உறவு உருவாக்கப்பட்டபோது, திருஅவையில் தலைமைப்பணியாற்றிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட், மற்றும், போலந்து அரசுத்தலைவர், Jozef Pilsudski ஆகிய இருவரின் உருவங்கள் பதிக்கப்பட்ட 2,40,000 தபால் தலைகள், முதல் தவணையாக வெளியிடப்பட்டுள்ளன.

100 ஆண்டுகளுக்கு முன், போலந்து, மற்றும் வத்திக்கான் நாடுகளுக்கிடையே அரசு சார்ந்த உறவு உருவாக்கப்பட்டு, பின்னர், இவ்விரு நாடுகளுக்குமிடையே, சிறிது காலத்திற்கு, இந்த உறவில் முறிவு காணப்பட்டாலும், போலந்து மக்கள், வத்திக்கானுடன் கொண்டிருந்த உறவில் எவ்வித மாற்றமும் உருவாகவில்லை என்று, இவ்வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட, போலந்து நாட்டு திருப்பீடத் தூதர், பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள் கூறினார்.

ஏற்கனவே, வத்திக்கானும், போலந்து நாடும் இணைந்து, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் 25ம் ஆண்டு பணி நிறைவு, அவர் போலந்து நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், அவரது புனிதர்பட்ட, மற்றும், அருளாளர் பட்ட நிகழ்வுகள், மற்றும் 2016ம் ஆண்டு, கிரக்கோவ் நகரில் இடம்பெற்ற இளையோர் உலக நாள் கொண்டாட்டம் ஆகிய தருணங்களில், சிறப்புத் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.

02 April 2019, 16:07