தேடுதல்

Vatican News
கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

விவிலியம், கடவுளின் உயிர்மூச்சை உலகுக்குள் கொணர்கிறது

இறைவார்த்தையும், வாழ்வும், ஒன்றையொன்று தழுவிக்கொள்கின்றன, ஒன்றிலிருந்து இன்னொன்றை, ஒருபோதும் பிரிக்க முடியாது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

விவிலியம் படிப்பதற்காக, அழகாகச் சேகரிக்கப்படும் புனித நூல்களில் ஒன்று அல்ல, மாறாக, இது, உலகின் தெருக்களில் அறிவிக்கப்பட வேண்டிய வாழ்வின் இறைவார்த்தை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். 

கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, இவ்வாரத்தில் உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை, ஏப்ரல் 26, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியமும் வாழ்வும் ஒருபோதும் பிரிக்க முடியாதவை என்று கூறினார்.

உயிருள்ள இறைவார்த்தை

“விவிலியமும் வாழ்வும்” என்ற இக்கருத்தரங்கின் கருப்பொருளை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தை உயிருள்ளது, வாழ்வை வழங்குவது, நம்மையும் கடந்து மற்றவரிடம் செல்வதற்கு அழைப்பு விடுப்பது, இறவாதது, வயதுகூட இல்லாதது மற்றும், என்றென்றும் நிலைத்திருப்பது என்று கூறினார்.

இறைவார்த்தை, மறைநூல் வழியாக பணியாற்ற விரும்பும், வாழ்வை வழங்கும் தூய ஆவியார் என்றும், அது கடவுளின் உயிர்மூச்சை உலகுக்குள் கொணர்கிறது என்றும் உரைத்த திருத்தந்தை, அது, ஆண்டவரின் வெப்பத்தோடு இதயத்தில் புகுகின்றது என்றும் கூறினார்.

இறைவார்த்தை விதைக்கப்பட வேண்டியது

விவிலியம் படிப்பதற்காக, அழகாகச் சேகரிக்கப்படும் புனித நூல்களில் ஒன்று அல்ல, மாறாக, அது விதைக்கப்பட வேண்டிய வாழ்வின் இறைவார்த்தை எனவும், திருஅவையின் வாழ்வில், வேறு எதனாலும் ஈடுசெய்யமுடியாத சக்தி எனவும், இதனாலேயே மறையுரைகள் அடிப்படையாக அமைகின்றன எனவும், திருத்தந்தை கூறினார்.    

மறையுரைகள், ஞானமுள்ள மனிதக் கருத்துக்களின் தொகுப்பு அல்ல, மாறாக, இறைவார்த்தையை, தூய ஆவியாரைப் பகிர்ந்துகொள்வதாகும் என்றும் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதன் வழியாக வாழ்கின்ற திருஅவை, தனது பாதுகாப்போடு ஒருபோதும் திருப்தியடைவதில்லை, தூய ஆவியாருக்குப் பணிந்து நடக்கிறது என்றும் உரைத்தார்.   

இறைவார்த்தை திருஅவையின் ஒவ்வொரு நடவடிக்கையின் மையமாக மாறினால்  எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்றுரைத்த திருத்தந்தை, இறைவார்த்தை உயிருள்ளது, அது நம்மை மௌனமாக இருக்கவிடாது என்றும் தெரிவித்தார்.

"இறைவார்த்தையும் வாழ்வும் : விவிலியம் திருஅவையின் மேய்ப்புப்பணிக்கும் மறைப்பணிக்கும் தூண்டுதல் – அனுபவமும் சவாலும்" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற இந்த பன்னாட்டு கருத்தரங்கு, இவ்வெள்ளியன்று முடிவடைந்தது.

26 April 2019, 15:07