தேடுதல்

Vatican News
லொரேத்தோ அன்னை மரியாவின் திருத்தலத்தில் திருத்தூது அறிவுரை மடலில் கையொப்பமிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் லொரேத்தோ அன்னை மரியாவின் திருத்தலத்தில் திருத்தூது அறிவுரை மடலில் கையொப்பமிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

புதுப்பிக்கப்பட்ட புனித ஜூலியோ ஆலயத்தில் திருத்தந்தை

ஏப்ரல் 7 வருகிற ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மோந்தேவெர்தே பகுதியிலுள்ள புனித ஜூலியோ பங்குக்கோவிலுக்கு திருத்தந்தை மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 7 வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மோந்தேவெர்தே பகுதியில் அமைந்துள்ள புனித ஜூலியோ பங்குக்கோவிலுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று, மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆடுகளாக அக்கோவில் புதுப்பிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டுள்ள புதிய பீடத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சிப்பார் என்று இவ்வறிப்பு கூறுகிறது.

ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு இப்பங்குக் கோவிலுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த பங்கைச் சேர்ந்த பல்வேறு குழுக்களை, குறிப்பாக, அங்குள்ள நோயுற்றோரை சந்தித்தபின், கோவிலில் திருப்பலியை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பலியில் வழங்கப்படும் காணிக்கை பொருள்கள், வீடற்றோர் பலருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்த பங்கின் பொறுப்பாளர், அருள்பணி தாரியோ பிரத்தீனி (Dario Frattini) அவர்கள் கூறியுள்ளார்.

1956ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பங்குக் கோவில், 2015ம் ஆண்டு பழுதடைந்ததால், கடந்த மூன்றாண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்தது என்றும், புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தையும், புதிய பீடத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சிப்பார் என்றும், பங்கு அருள்பணியாளர் கூறினார்.

மேலும், இளையோரை மையப்படுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் கருத்துக்களைத் தொகுத்து, "கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை” என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கி, மார்ச் 25, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாளன்று, லொரேத்தோ அன்னை மரியாவின் திருத்தலத்தில் கையொப்பமிட்ட திருத்தூது அறிவுரை மடல், ஏப்ரல் 2, இச்செவ்வாயன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

01 April 2019, 16:19