தேடுதல்

Vatican News
அன்னை மரியாவின் புனித இல்லம் என்று வழங்கப்படும் சிற்றாலயத்தில் திருத்தந்தை அன்னை மரியாவின் புனித இல்லம் என்று வழங்கப்படும் சிற்றாலயத்தில் திருத்தந்தை  (ANSA)

லொரேத்தோ அருங்காட்சியகத்தில் திருத்தந்தை கையெழுத்திட்ட மடல்

திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரதியில், திருத்தந்தை, லொரேத்தோ மரியன்னை திருத்தலத்தில் கையெழுத்திட்டதையடுத்து, அத்திருத்தலத்தின் அருங்காட்சியகத்தில், அப்பிரதி, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் டுவிட்டர் செய்திகளில் ஒன்றாக, ஏப்ரல் 3, இப்புதனன்று வழங்கிய மற்றொரு செய்தியில், நம் அகந்தையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

"நமது அகந்தை, சுய நிறைவு ஆகிய பொய் தெய்வ வழிபாடுகளை விட்டு விலகவும், ஆண்டவரும் அவரது இரக்கமும் நமக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளவும், செபத்தின் வழியே நாம் கற்றுக்கொள்கிறோம்" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

"கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரதியில், மார்ச் 25ம் தேதி, திருத்தந்தை, லொரேத்தோ மரியன்னை திருத்தலத்தில் கையெழுத்திட்டதையடுத்து, அப்பிரதி, அத்திருத்தலத்தின் அருங்காட்சியகத்தில், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அத்திருத்தலம் அறிவித்துள்ளது.

இளையோரை மையப்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம், இம்மடலை உருவாக்க பெரும் தூண்டுதலாக இருந்ததென்று, கூறியுள்ள திருத்தந்தை, 9 பிரிவுகளில், 299 பத்திகளில் இத்திருத்தூது அறிவுரை மடலை எழுதியுள்ளார்.

"இளையோருக்கும் இறைமக்கள் அனைவருக்கும்" என்ற அழைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இம்மடலின் முதல் பிரதி, இஸ்பானிய மொழியில் அமைத்திருந்தது என்பதும், திருத்தந்தை கையெழுத்திட்ட இந்தப் பிரதி, மார்ச் 27ம் தேதி முதல், இத்திருத்தலத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

நான்கு திருத்தூது அறிவரை மடல்கள்

தனக்கு முன் திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் துவங்கிய 'நற்செய்தியின் மகிழ்வு' (Evangelii Gaudium) என்ற திருத்தூது அறிவுரை மடலை நிறைவு செய்து, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, குடும்பங்களை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொகுத்து, 'அன்பின் மகிழ்வு' (Amoris laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடலை, 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

இன்றைய உலகில் புனிதம் அடைவதை மையப்படுத்தி, 'அகமகிழ்ந்து களிகூருங்கள்' (Gaudete et exsultate) என்ற திருத்தூது அறிவுரை மடலை, 2018ம் ஆண்டு வெளியிட்ட திருத்தந்தை பிரானிஸ் அவர்கள், தற்போது, 'கிறிஸ்து வாழ்கிறார்' (Christus vivit) என்ற தலைப்பில், இளையோரை மையப்படுத்தி தன் 4வது திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டுள்ளார்.

03 April 2019, 15:13