தேடுதல்

Vatican News
புயலால் வீடுகளை இழந்த நேபாள மக்கள் புயலால் வீடுகளை இழந்த நேபாள மக்கள்  (AFP or licensors)

நேபாள புயலால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்

நேபாளத்தில் வீசிய புயல், மழையால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர், அனைவருக்காகவும் தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிடும் தந்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தின் மையப்பொருள்களில் ஒன்றான, பாவத்தை விட்டு விலகுதல் என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 5 இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கினார்.

"பாவத்தைத் தவிர்த்து வாழ்வது, நமது படைப்பிற்கும் நம்பிக்கை வழங்குகிறது. 'படைப்பு, அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும்.' (உரோமையர் 8:21)" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 31, கடந்த ஞாயிறன்று நேபாளத்தில் வீசிய புயல், மழையால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர், அனைவருக்காகவும் தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிடும் தந்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு அப்போஸ்தலிக்கப் பிரதிநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் தன் அருகாமையையும், உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தன் செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளதாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்தியில் கூறியுள்ளார்.

மேலும் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அதிகாரிகள், மற்றும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், நேபாள மக்கள் அனைவருக்கும் தான் செபிப்பதாக திருத்தந்தை இத்தந்தியில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 31, ஞாயிறு இரவு, தெற்கு நேபாளத்தில் வீசிய புயலால், இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

05 April 2019, 13:21