தேடுதல்

Vatican News
சிறுமிக்கு செபமாலை வழங்கும் திருத்தந்தை சிறுமிக்கு செபமாலை வழங்கும் திருத்தந்தை 

திருத்தந்தை - மிலான் இளையோர்க்கு 6000 செபமாலைகள் அன்பளிப்பு

பானமா உலக இளையோர் நாளுக்காகத் தயாரிக்கப்பட்ட செபமாலைகளில் ஆறாயிரத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பெயர் விழா நாளில், மிலான் உயர்மறைமாவட்ட இளையோர்க்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரின் உயிர்ப்பின் அறிவிப்பு, நம் நம்பிக்கையை நிலைகுலையாது தாங்கிப் பிடிக்கிறது மற்றும், அதை, தெளிவான பிறரன்புச் செயல்களாக மாற்றுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.  

ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று, தனது டுவிட்டரில் இவ்வாறு, பதிவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் இந்த உயிர்ப்புப் பெருவிழா காலத்தில், பிறரன்பு செயல்கள் ஆற்றுவதற்கு நம்மைத் தூண்டியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நாம விழா

மேலும், தனது நாம விழாவான ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று, தனது பிறரன்பு அலுவலகத்தின் வழியாக, மிலான் உயர்மறைமாவட்ட இளையோர்க்கு ஆறாயிரம் செபமாலைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பளிப்பாக அளித்துள்ளார் என்று, திருப்பீட செய்தி தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்தோர ஜிசோத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

இச்செவ்வாய் காலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மிலான் உயர்மறைமாவட்ட பேராயர் Mario Delpini அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியில் கலந்துகொண்ட இளையோர்க்கு, பானமா உலக இளையோர் நாளுக்காகத் தயாரிக்கப்பட்ட செபமாலைகளில் ஆறாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார் திருத்தந்தை.

இவற்றை வழங்கியதன் வழியாக, இளையோர் தங்களின் செபங்களில் சிறப்பான முறையில் தன்னை நினைவுகூருமாறு, குறிப்பாக, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதம் தொடங்குவதற்கு, இன்னும் சிலநாள்களே உள்ளவேளை, தன்னை, அன்னை மரியாவிடம் அர்ப்பணிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த இளையோர், ஏப்ரல் 24, இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெறும் திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரையிலும் பங்குகொள்வர் என, ஜிசோத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமுழுக்குப் பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்பதாகும். ஹோர்கே அதாவது ஜார்ஜ் என்ற புனிதரின் விழா ஏப்ரல் 23ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

23 April 2019, 12:00