தேடுதல்

Vatican News
இறை இரக்கத்தின் ஆண்டவர் இறை இரக்கத்தின் ஆண்டவர் 

நாம் மறந்தாலும், நம்மை மறக்காமல் தேடுபவர்

இதயங்களை இரக்கத்திற்கெனத் திறந்து, ஒரு சகோதரத்துவ அரவணைப்புடன், மன்னிப்பின் முத்திரையை அங்கு பதிக்கும்போது, தீமையை நன்மையால் வெற்றிகொள்ளமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

நாம் இறைவனை மறந்தாலும், நம்மை மறக்காமல் அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நீ கடவுளைத் தேடவில்லையெனினும், கடவுள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார். நீ கடவுளை மறந்துவிட்டாலும், அவர் இன்னும் உன்னை அன்பு கூர்ந்து கொண்டிருக்கிறார். உன்னுடைய திறமைகளையெல்லாம் பயனற்ற முறையில் வீணாக்கிவிட்டதாக நீ எண்ணினாலும், உனக்குள் அழகைத் தேடுகிறார் இறைவன்' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஏப்ரல் 28, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட இறை இரக்கத்தின் ஞாயிறை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை வழங்கினார்.

 'நம் இதயங்களை இரக்கத்திற்கெனத் திறந்து, ஒரு சகோதரத்துவ அரவணைப்புடன் மன்னிப்பின் முத்திரையை அங்கு பதிக்கும்போது, தீமையை நன்மையால் வெற்றிகொள்ளமுடியும் என்பதை, நம்மால் உலகிற்கு பறைசாற்ற முடியும்.' என்ற செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் இஞ்ஞாயிறன்று வெளியிட்டிருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 29, இத்திங்கள் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,957 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 80 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

29 April 2019, 15:20