தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் டோகோ குடியரசின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் டோகோ குடியரசின் அரசுத் தலைவர்  

திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைத்த புனித கத்தரீனா

திருஅவைக்காக செபிப்பதிலும் உழைப்பதிலும் தன் நேரத்தைச் செலவிட்ட சியென்னா நகர் புனித கத்தரீனா அவர்களின் பரிந்துரையோடு, திருஅவையின் ஒன்றிப்புக்காக செபிப்போம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

ஏப்ரல், 29, இத்திங்கள், ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவரான, சியென்னா நகர் புனித கத்தரீனா திருநாளன்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் துவக்கத்தில், இப்புனிதரைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவரான புனித கத்தரீனா அவர்கள், திருஅவையின் ஒன்றிப்புக்காக அதிகம் அதிகமாக உழைத்துள்ளார் என்று கூறினார் திருத்தந்தை.

திருஅவைக்காகச் செபிப்பதிலும், உழைப்பதிலும், தன் நேரத்தைச் செலவிட்ட சியென்னா நகர் புனித கத்தரீனா அவர்களை நோக்கி, திருஅவையின் ஒன்றிப்புக்காகவும், இத்தாலி நாட்டிற்காகவும், ஐரோப்பிய ஒன்றிப்பிற்காகவும் பரிந்துரைக்குமாறு செபிப்போம், என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று காலையில், திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார். டோகோ குடியரசின் அரசுத் தலைவர் Faure Essozimna Gnassingbé.

திருத்தந்தையை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும்,  பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், சந்தித்து உரையாடினார், டோகோ நாட்டு அரசுத்தலைவர். 

வத்திக்கான் அதிகாரிகளுக்கும் டோகோ அரசுத் தலைவருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது, அந்நாட்டில் திருஅவை ஆற்றிவரும் ஒன்றிணைந்த சமூகப்பணிகள், குறிப்பாக, நல ஆதரவுப்பணிகள் மற்றும் கல்விப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

29 April 2019, 15:02