தேடுதல்

Vatican News
கொரிய மக்களுக்கு காணொளிச் செய்தி வழங்குகிறார் திருத்தந்தை கொரிய மக்களுக்கு காணொளிச் செய்தி வழங்குகிறார் திருத்தந்தை 

கொரிய தீபகற்பத்தில் அமைதியின் புதிய சகாப்தம் நிலவுவதாக!

ஒன்றிப்பு, உரையாடல், உடன்பிறப்பு உணர்வுகொண்ட தோழமை ஆகியவை, கொரிய மக்கள் அனைவருக்கும் உண்மையிலேயே இயலக்கூடியதாக அமைவதற்கு, Panmunjom ஓராண்டு நிறைவு நிகழ்வு, ஒரு வாய்ப்பாக உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கொரிய தீபகற்பத்தில், அமைதி, வளமை மற்றும் ஒன்றிப்பு நிலவுவதற்கென, Panmunjom  அறிக்கை வெளியிடப்பட்ட முதலாமாண்டு நிறைவு நிகழ்வு, ஏப்ரல் 27, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, கொரிய மக்களுக்கு, தனது நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வட மற்றும் தென் கொரிய நாடுகளின் எல்லையிலுள்ள, Panmunjom  என்ற கிராமத்தில், இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்களும், கடந்த ஆண்டு ஏப்ரலில் கையெழுத்திட்ட அமைதி அறிக்கையின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நல்வாழ்த்தை, காணொளிச் செய்தியாக அனுப்பியுள்ளார்.

ஒன்றிப்பு, உரையாடல் மற்றும் உடன்பிறப்பு உணர்வுகொண்ட தோழமை ஆகியவை, அனைவருக்கும் உண்மையிலேயே இயலக்கூடியதாக மாறுவதற்கு, இந்த நிகழ்வு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்ற தனது நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

பொறுமை மற்றும் விடாஉறுதியுடன் எடுக்கப்படும் முயற்சிகள் வழியாக, நல்லிணக்கம் மற்றும், நல்அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், பிரிவினைகளையும், முரண்பாடுகளையும் அகற்றுவதாக என வாழ்த்தியுள்ள திருத்தந்தை, Panmunjom ஓராண்டு நிறைவு நிகழ்வு, அனைத்து கொரிய மக்களுக்கும் அமைதியின் புதிய சகாப்தத்தைக் கொணரட்டும் என வாழ்த்தி, தனது செபங்களையும், ஆசீரையும் தெரிவித்துள்ளார்.

Panmunjom அறிக்கை

வட கொரிய அதிபர் Kim Jong-un அவர்களும், தென் கொரிய அரசுத்தலைவர் Moon Jae-in அவர்களும், 2018ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி, Panmunjomல் சந்தித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

இந்த அறிக்கையின்படி, கொரியப் போரையும், கொரிய நாடுகளுக்கிடையே இடம்பெறும் மோதல்களையும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதாக, இரு கொரிய அரசுகளும் உறுதியளித்தன. கொரிய தீபகற்பத்தை, அணு ஆயுதமற்ற பகுதியாக அமைக்கவும் அவர்கள் அறிவித்தனர். அமைதி, தேசிய ஒப்புரவு, வளமை, கொரிய நாடுகளுக்கிடையே சமுதாயத் தொடர்புகள், மக்கள் மத்தியில் உறவுகள் போன்றவற்றை வளர்க்கவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.

27 April 2019, 15:46