தேடுதல்

Vatican News
விமானத்திற்குள் பத்திரிகையாளர் சந்திப்பு விமானத்திற்குள் பத்திரிகையாளர் சந்திப்பு 

சுவர்களை எழுப்புவோர், தங்களுக்கு சிறைகளை எழுப்புகின்றனர்

திருத்தந்தை, செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில், இஸ்லாமிய நாடுகளில் நிலவும் மதச் சுதந்திரம், புலம்பெயர்வோரைத் தடுக்க எழுப்பப்படும் சுவர்கள், திருஅவையில் சிறாரின் பாதுகாப்பு உட்பட, பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மொராக்கோவிலும், அபுதாபியிலும் மேற்கொள்ளப்பட்ட அமைதி மற்றும் ஒற்றுமை முயற்சிகள், இப்போது மலர்களாக உள்ளன என்றும், இவை, பின்னர், கனிகளாக மாறும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 31, இஞ்ஞாயிறு மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொராக்கோ நாட்டின் தலைநகர், ரபாட்டிலிருந்து, உரோம் நகருக்கு திரும்பிக்கொண்டிருந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில், இஸ்லாமிய நாடுகளில் நிலவும் மதச் சுதந்திரம், புலம்பெயர்வோரைத் தடுக்க எழுப்பப்படும் சுவர்கள், திருஅவையில் சிறாரின் பாதுகாப்பு உட்பட, பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

திருத்தந்தையின் மொராக்கோ பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருந்தாலும், இப்பயணத்தின் விளைவாக, உலக அமைதி வளருமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடலை வளர்க்க, மொராக்கோ நாட்டில் ஆர்வம் இருந்தது என்பதையும், அந்நாட்டு மக்கள், சுவர்களுக்குப் பதில், பாலங்கள் எழுப்ப ஆர்வம் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்பதையும், எடுத்துரைத்தார்.

பல இஸ்லாமிய நாடுகள், பிற மத வழிபாடுகளை அனுமதித்த போதிலும், அந்நாடுகளில், இஸ்லாமியர், வேறு மதங்களுக்கு மத மாற்றம் அடைவது தடை செய்யப்பட்டுள்ளது, அல்லது, தண்டிக்கப்படுகிறது என்று கூறிய செய்தியாளர் ஒருவர், இது குறித்து திருத்தந்தையின் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு விடையளித்தபோது, கிறிஸ்தவ வரலாற்றில், சில நூற்றாண்டுகளுக்குமுன், மத நம்பிக்கையற்றவர்கள் என்று தீர்ப்பிடப்பட்டவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர் என்பதை நினைவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிலையிலிருந்து படிப்படியாகத் தெளிவுபெற்றுள்ள கத்தோலிக்கத் திருஅவை, இன்று, மரண தண்டனை தவறானது என்பதை, தன் மறைக்கல்வி உண்மையாக வெளியிட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அதேவண்ணம், ஒரு சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் மதமாற்றம் அடைவது தடை செய்யப்பட்டாலும், அவர்கள், வேற்று நாடுகளுக்குச் சென்று மதமாற்றம் அடைந்து திரும்பிவரும்போது, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தன்னிடம் கூறப்பட்டது என்பதையும் திருத்தந்தை இப்பேட்டியில் எடுத்துரைத்தார்.

குடிபெயர்தல் என்ற பிரச்சனை, சுவர்களை எழுப்புவதால் தீர்க்கப்படுவதில்லை என்று மொராக்கோ நாட்டில் திருத்தந்தை கூறிய சொற்களை நினைவுபடுத்திய ஒரு செய்தியாளர், மொராக்கோ நாட்டின் வழியே, ஐரோப்பாவில் நுழைவோரைத் தடுக்க, கத்திகளால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தடைச்சுவரை, ஸ்பெயின் நாடு எழுப்பியுள்ளது குறித்தும், அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், தன் நாட்டின் தெற்கு எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது குறித்தும், கேள்விகள் எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கம்பிகளால் ஆன, அல்லது, கற்களால் ஆன சுவர்களை எழுப்புவோர், தாங்கள் உருவாக்கும் சுவர்களுக்குள் கைதிகளாக மாறுவர் என்பதை, வரலாறு நமக்குச் சொல்லித்தரும் என்று பதிலளித்தார்.

தடுப்புச் சுவர்களைப் பற்றி தொடர்ந்து பேசிய திருத்தந்தை, கத்திகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவரை, ஜொர்டி ஏவோலே (Jordi Evole) என்ற செய்தியாளர், ஒரு காணொளி வடிவில் தன்னிடம் காட்டிய வேளையில், தான் மிகவும் வேதனையடைந்ததாகவும், அச்செய்தியாளர் சென்றபிறகு, தான் தனிமையில் கண்ணீர் சிந்தியதாகவும் இப்பேட்டியில் குறிப்பிட்டார்.

குடிபெயர்தல் பிரச்சனையைக் குறித்து தன்னிடம் பேசிய அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) என்ற மற்றொரு செய்தியாளர், இப்பிரச்சனையைத் தடுக்க பல்வேறு நாடுகள் உருவாக்கிவரும் ஒப்பந்தங்களைப்பற்றி பேசியபின், "ஒப்பந்தங்களுக்கு மேலாக, மனித உரிமைகள் முதன்மை பெறுகின்றன" என்ற அற்புதமானக் கருத்தை வெளியிட்டார் என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிப்ராஸ் அவர்கள் கூறிய கருத்து, நொபெல் பரிசு பெறுவதற்குரிய ஒரு வாக்கியம் என்று எடுத்துரைத்தார்.

01 April 2019, 15:50