தேடுதல்

Vatican News
மிலான் நகரின் சான் கார்லோ கல்வி மையத்தின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் திருத்தந்தை மிலான் நகரின் சான் கார்லோ கல்வி மையத்தின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் திருத்தந்தை  (ANSA)

மிலான் நகர் சான் கார்லோ கல்வி மையத்தினருடன் திருத்தந்தை

ஏழைக் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணமாகும் ஆயுதங்களை, பணக்கார நாடுகள் ஏன் விற்பனை செய்கின்றன? – மாணவர்களிடம் திருத்தந்தையின் கேள்வி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர், தாங்கள் சென்றடையும் நாடுகளில் வளத்தையே கொணர்கின்றனர், ஏனெனில், ஐரோப்பியக் கண்டம் அத்தகைய புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்டதே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் கூறினார்.

மிலான் நகரின் சான் கார்லோ கல்வி மையத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவரின் பெற்றோர் ஆகியோர் அடங்கிய 2600 பிரதிநிதிகளை, புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடியேற்றதாரர்களை குற்றவாளிகளாக காணும் கண்ணோட்டத்தைத் தவிர்க்கவேண்டும், ஏனெனில் நாம் ஒவ்வொருவருமே ஒரு நாள் குற்றவாளிகளாகக் கருதப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

கல்வி மையங்களில் புதிதாக இணையும் மாணவர்களை, அதிலும், சிறிது வேறுபட்ட தோற்றமுடைய மாணவர்களை, கேலி, கிண்டல் செய்யும் போக்கை கைவிட அழைப்பு விடுத்த திருத்தந்தை, எளியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கேலியும், கிண்டலும் ஒரு போரை அறிவிப்பதற்குச் சமமாகும் என்று எடுத்துரைத்தார்.

இன்றைய உலகில் காணப்படும் பாகுபாடுகள், செல்வர்-வறியோர் இடைவெளிகள், பசியால் வாடும் குழந்தைகள், பாராமுகமாய் நடந்துகொள்ளுதல் ஆகியவற்றைக் குறித்து பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தீமைகள் அனைத்தும் இறைவனால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக, நம் அநீதியான பொருளாதார அமைப்புக்களின் விளைவுகள் என்று சுட்டிக்காட்டி, இவற்றை மாற்றியமைக்க நம் முயற்சியும், ஈடுபாடும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.

ஏழைக் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணமாகும் ஆயுதங்களை, பணக்கார நாடுகள் ஏன் விற்பனை செய்கின்றன என்ற கேள்வியையும், தன்னைச் சந்திக்க வந்திருந்த சான் கார்லோ கல்வி மையத்தின் பிரதிநிதிகளிடம் எழுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

06 April 2019, 16:41