தேடுதல்

Vatican News
பாஸ்கா மெழுகுதிரியை மந்திரிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் பாஸ்கா மெழுகுதிரியை மந்திரிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கல்லை அகற்றுவதுதான் உயிர்ப்பு விழா – திருத்தந்தை மறையுரை

வாழும் இறைவனை நம் வாழ்வின் மையமாக்குவோம். பிரச்சனைகள் என்ற அலைகள் நம்மை அடித்துச்சென்று, விரக்தி, அச்சம் என்ற பாறைகளில் மோதாமல் இருக்க அருளை வேண்டுவோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 20, சனிக்கிழமை இரவு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், பாஸ்கா திருவிழிப்பு வழிபாட்டை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவிழிப்பு திருப்பலியில் வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:

1. நறுமணப் பொருள்களை ஏந்தி, கல்லறைக்குச் சென்ற பெண்கள், கல்லறையை மூடியிருந்த கல்லைப்பற்றி எண்ணியபடியே சென்றனர். அப்பெண்களின் பயணம், நாம் இந்த இரவில் கடந்து வந்த மீட்பின் பயணத்தை நினைவூட்டுகிறது. அனைத்தையும் ஒரு கல் அடைத்து நிற்பதைப்போல் உணர்கிறோம். படைப்பின் அழகை மறைத்து நிற்கும் பாவம்; அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எதிராக நிற்கும் வாக்கு மாறும் நிலை; இறைவாக்கினர்கள் வழங்கிய உறுதி மொழிகளுக்கு எதிராக நிற்கும் மக்களின் அக்கறையற்ற நிலை. இதே நிலை, திருஅவையின் வரலாற்றிலும், நம் சொந்த வாழ்விலும் வெளிப்படுகிறது. நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும், நம் இலக்கை நோக்கி ஒருபோதும் செல்வதில்லை என்ற உணர்வு எழுகிறது.

கல்லை அகற்றுவதுதான் உயிர்ப்பு விழா

இன்று, நமது பயணம், ஒரு கல்லறை கல்லை நோக்கிச் செல்வதில்லை என்பதை உணர்கிறோம். "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?" (லூக்கா 24:5) என்ற சொற்கள், அப்பெண்களை வியப்பில் ஆழ்த்தி, வரலாற்றை மாற்றி அமைக்கின்றன. அனைத்தும் நம்பிக்கையற்று போனது என்று ஏன் நினைக்கிறீர்கள்? கல்லறைக் கல்லை யாராலும் எடுக்கமுடியாது என்று ஏன் எண்ணுகிறீர்கள்? தோல்வி, விரக்தி என்ற எண்ணங்களுக்கு ஏன் இடம் தருகிறீர்கள்?

கல்லறைக் கல்லை, பாறைகளை அகற்றுவதுதான் உயிர்ப்பு விழா. நமது நம்பிக்கை எதிர்பார்ப்பு ஆகியவற்றை சிதறடிக்கும் கடினமான பாறைகளையும் இறைவன் அகற்றுகிறார். மனித வரலாறு, கல்லறை கல்லுக்கு முன் முடிவதில்லை, மாறாக, 'உயிருள்ள கல்லை' (1 பேதுரு 2:4) சந்திப்பதில் அடங்கியுள்ளது. உயிருள்ள கல்லான இயேசுவின் மீது திருஅவையாகிய நாம் கட்டப்பட்டுள்ளோம். நம் உள்ளத்தை மூடியிருக்கும் கனமான கல்லை அகற்றும் உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்க வந்திருக்கிறோம். எனவே, முதலில் நாம் நம்மையே கேட்கும் கேள்வி: நான் அகற்றவேண்டிய கல்லின் பெயர் என்ன?

மனத்தளர்வு என்ற கல்

நம் நம்பிக்கையைத் தடுத்து நிற்கும் கல், மனத்தளர்வு. அனைத்தும் மோசம், இதைவிட மோசமானது ஒன்றுமில்லை என்ற எண்ணம் நமக்குள் உருவாகும்போது, நாம் வாழ்வை விட, சாவின் மீது நம்பிக்கை கொள்கிறோம். எதிர்மறையான எண்ணங்களுடன், அனைத்திலும் குறை கண்டபடி, மனம் தளர்ந்துவிடுகிறோம். ஒருவகையான கல்லறை உளவியல் நம் வாழ்வை நிறைத்துவிடுகிறது. அவ்வேளையில், நாம் மீண்டும் உயிர்ப்பு நாளன்று வழங்கப்பட்ட செய்தியைக் கேட்கிறோம்: "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?" நம் இறைவன் இறந்தோரின் கடவுள் அல்ல, அவர், வாழ்வோரின் கடவுள். நம்பிக்கையைப் புதைக்கவேண்டாம்!

பாவம் என்ற கல்

நம் உள்ளங்களை மூடியிருக்கும் மற்றொரு கல், பாவம் என்ற கல். பாவம் நம்மைக் கவர்ந்திழுத்து, கல்லறையில் விட்டுச் செல்கிறது. வாழும் அனைத்திலும் சாவைத் தேடுவதற்கு பாவம் உதவி செய்கிறது. நமது இதயங்களை மூடியிருக்கும் பாவம் என்ற கல்லை அகற்றி, இயேசு என்ற ஒளியை அங்கு நுழைய விடுவோம். நம் இதயங்களை மூடிவிடும் அகந்தை, செல்வம், ஆகிய வெறுமையான விடயங்களிடம், நாம் வாழும் இறைவனுக்காக வாழ்கிறோம் என்று சொல்வோம்.

இருளுக்குள் நிற்பதை விரும்புகிறோம்

2. கல்லறைக்குச் சென்ற பெண்களை மீண்டும் எண்ணிப்பார்ப்போம். அவர்கள் வானதூதர்களைக் கண்டதும், "அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர்" (லூக்கா 24:5) என்று நற்செய்தியில் காண்கிறோம். இதைப்போல் நாம் எத்தனை முறை நடந்துகொள்கிறோம்? நம் தோல்விகளில், அச்சங்களில், குறைகளில் தலைகுனிந்து நிற்பதை நாம் விரும்புகிறோம். ஆண்டவருக்காக நம் உள்ளங்களைத் திறப்பதற்குப் பதில், இருளுக்குள் நிற்பது, நமக்கு எளிதாக உள்ளது. "நாம் உயர்ந்து நிற்கும்படி அழைப்பு பெறும்வரை, நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் உணரப்போவதில்லை" (E. DICKINSON) என்று ஒரு கவிஞர் கூறியுள்ளார். சாவின் ஆழத்திலிருந்து நம்மை உயர்ந்து எழும்படி, ஆண்டவர் அழைக்கிறார்: "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?"

'கடந்து செல்லும்' உணர்வு

மரணத்தை வாழ்வாகவும், புலம்பலைக் களிநடனமாகவும் (தி.பா. 30:11) மாற்றுவதில் வல்லவர் இயேசு. அவருடன் நாமும் 'கடந்து செல்லும்' உணர்வைப் பெறுவோம். சுயநலத்திலிருந்து, உறவுக்கு, மனத்தளர்விலிருந்து, நிறைவுக்கு, அச்சத்திலிருந்து, நம்பிக்கைக்கு கடந்து செல்வோம். அவரது அன்பு என்றென்றும் மாறாது என்பது மட்டுமே, நம் வாழ்வின் அசைக்கமுடியாத உறுதி. நம்மை நாமே கேட்போம்: என் வாழ்வில் எதை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்? நான் கல்லறைகளைப் பார்க்கிறேனா, அல்லது, வாழும் ஒருவரைத் தேடுகிறேனா?

நினைவுகளே நம்பிக்கையின் அடித்தளங்கள்

3. "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?" என்று அப்பெண்களிடம் கூறிய வானதூதர்கள், "கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்" (லூக்கா 24:6) என்று மேலும் கூறுகின்றனர். கலிலேயாவில் தங்களுடன் வாழ்ந்த இயேசுவின் நினைவுகளை அப்பெண்கள் மறந்துவிட்டதால், அவர்கள், கல்லறையில் அவரைத் தேடிக்கொண்டிருந்தனர். இயேசுவை முதலில் சந்தித்தது, அவர் மீது கொண்ட முதல் அன்பு ஆகிய நினைவுகளே நம் நம்பிக்கையின் அடித்தளங்கள். இந்த நினைவுகள் இல்லையெனில், நம் கிறிஸ்தவ நம்பிக்கை, உயிர்ப்பின் நம்பிக்கையாக இல்லாமல், அருங்காட்சியக நம்பிக்கையாக மாறிவிடும். நாம் முதலில் இயேசுவைச் சந்தித்த அனுபவம், அவர் நம் இதயங்களைத் தொட்டு, நாம் இருளை வெல்வதற்கு உதவிய அனுபவம், ஆகியவற்றை இன்று நினைவுகூர்வோம்.

கல்லறையைவிட்டு அகன்று செல்ல...

உயிர்ப்புச் செய்தியைக் கேட்ட பெண்கள், கல்லறையைவிட்டு அகன்று சென்றனர். நம்பிக்கை கொண்டோர், கல்லறைகளுக்கருகில் நின்றுவிடக்கூடாது என்பதை, உயிர்ப்புப் பெருவிழா சொல்லித் தருகிறது. வாழும் இறைவனைச் சந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம்மை நாமே கேட்போம்: என் வாழ்வில், நான் எங்கே செல்கிறேன்? சில வேளைகளில், நாம் நம் பிரச்சனைகளை நோக்கிச் செல்கிறோம்; அங்கு இறைவனின் உதவியைத் தேடுகிறோம். எத்தனை முறை நாம் வாழும் இறைவனை, இறந்தோர் நடுவே தேடியிருக்கிறோம்? அல்லது, வாழும் இறைவனைச் சந்தித்தபின், எத்தனை முறை நாம் மீண்டும் இறந்தோரைத் தேடிச் சென்றிருக்கிறோம்? உயிர்த்த இறைவன் நம் வாழ்வை மாற்றுவதற்கு அனுமதிக்காமல், வேதனைகள், தோல்விகள், நிறைவற்ற நிலை என்ற இறந்த காலத்தை எத்தனை முறை தோண்டியிருக்கிறோம்?

வாழும் இறைவன், வாழ்வின் மையம்

அன்பு சகோதர, சகோதரிகளே, வாழும் இறைவனை நம் வாழ்வின் மையமாக்குவோம். இன்றையப் பிரச்சனைகள் என்ற அலைகள் நம்மை அடித்துச்சென்று, விரக்தி, அச்சம் என்ற பாறைகளில் நம்மை மோதாமல் இருக்க அருளை வேண்டுவோம். அனைத்திலும், அனைத்திற்கும் மேலாக, ஆண்டவரைத் தேடும் வரம் வேண்டுவோம். அவரோடு நாம் மீண்டும் உயிர்ப்போம்.

21 April 2019, 11:06