தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் ஏப்ரல் மாத செபக்கருத்துடன் வெளியிடப்பட்ட 'The Pope Video' திருத்தந்தையின் ஏப்ரல் மாத செபக்கருத்துடன் வெளியிடப்பட்ட 'The Pope Video' 

போர்க்களங்களில் பணியாற்றும் மருத்துவப்பணியாளருக்காக...

போர்களால் சிதைந்துள்ள இடங்களில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்காவும், உடன் உழைப்போருக்காகவும் செபிப்போம் – திருத்தந்தையின் செபக்கருத்து

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்களின் தாக்கங்களால் சிதைந்துள்ள இடங்களில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோரை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஏப்ரல் மாதம் செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

'The Pope Video' காணொளி

இவ்வியாழன் பிற்பகல் வெளியிடப்பட்ட 'The Pope Video' காணொளியில், போர்க்களங்களில் பல்வேறு கடினமானச் சூழல்களுக்கிடையே பணியாற்றும் மருத்துவர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போர்க்களக் காட்சிகள் ஒன்றில், காயமடைந்துள்ள ஒரு மருத்துவப் பணியாளர், காயமுற்றிருக்கும் மற்றொரு படைவீரருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்வதுபோலும், அவ்வுதவிகளைப் பெறுவோரின் தலையில் கைவைத்து, இந்த உதவியாளர் தேற்றுவதுபோலவும் ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் பின்னணியில் காட்டப்படும் வேளையில், இடையிடையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரையில் தோன்றி, இஸ்பானிய மொழியில் தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார்.

நம்பிக்கையின் அடையாளமாக...

போர்களின் தாக்கங்களால் சிதைந்துள்ள இடங்களில், மருத்துவர்கள் மற்றும், நலப்பணியாளர்களின் பிரசன்னம் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது. அறிவு, துணிவு மற்றும் நல்மனம் கொண்ட இவர்கள், தங்கள் அழைத்தலைப் பின்பற்றும் ஆவலுடன், மிகுந்த ஆபத்தானச் சூழல்களில் பணியாற்றுகின்றனர் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

செபத்தின் திருத்தூதுப் பணி

செபத்தின் திருத்தூதுப் பணி என்ற பெயரில், இயேசு சபையினர் நடத்திவரும் ஓர் அமைப்பு, ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை, விசுவாசிகளுடன் பகிர்ந்துகொள்ளும் செபக்கருத்துக்களை, 'The Pope Video' என்ற காணொளி வடிவில் YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறது.

1844ம் ஆண்டு, இயேசு சபையினரால் துவக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப் பணி, தற்போது 98 நாடுகளில், 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பணியாற்றி வருகிறது என்று, இந்த அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளர், அருள்பணி Frédéric Fornos அவர்கள் கூறியுள்ளார்.

04 April 2019, 15:00