தேடுதல்

Vatican News
மாசிடோனிய மொழியில் வத்திக்கான் செய்திகளின் வலைத்தளத்தைக் காணும் Skopje ஆயர் Kiro Stojanov மாசிடோனிய மொழியில் வத்திக்கான் செய்திகளின் வலைத்தளத்தைக் காணும் Skopje ஆயர் Kiro Stojanov 

மாசிடோனியா உட்பட, 34 மொழிகளில் வத்திக்கான் செய்திகள்

தமிழ் உட்பட, உலகின் 33 மொழிகளில் தினசரி செய்திகளை வழங்கி வரும் திருப்பீடத்தின் செய்தித் துறை, தற்போது மாசிடோனியா மொழியுடன் 34 ஆக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவோரான C9 எனப்படும், கர்தினால்கள் குழுவைச் சேர்ந்தவர்களுடன் இத்திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சந்திப்பைத் துவக்கினார்.

மூன்று நாட்கள் இடம்பெறும் இக்கர்தினால்கள் குழுவின் 29வது ஆலோசனைக் கூட்டம், நாளை மறு நாள் புதனன்று நிறைவுக்கு வரும்.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் மே மாதம் 7ம் தேதி வட மாசிடோனியா குடியரசில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, வத்திக்கான் செய்தித் துறையின் வழியாக இணையத்தில் செய்திகள் வழங்கப்படும் மொழிகளின் எண்ணிக்கையில் மாசிடோனியா மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.

15,000த்திற்கும் அதிகமான பைசன்டைன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த கத்தோலிக்கர்களையும் உள்ளடக்கியதாக, 20,000 கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள வட மாசிடோனியா குடியரசில் வாழ்வோர், இத்திங்கள் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நடவடிக்கைகளையும், உலகளாவிய கத்தோலிக்கர்களின் செயல்பாடுகளையும் அறிய இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று, வத்திக்கான் செய்திகளின் ஒருங்கிணைப்பாளர், அந்திரேயா தோர்னியெல்லி அவர்கள் கூறினார்.  

ஏற்கனவே, தமிழ் உட்பட, உலகின் 33 மொழிகளில் தினசரி செய்திகளை வழங்கி வரும் திருப்பீடத்தின் செய்தித் துறை, தற்போது மாசிடோனியா மொழியுடன் 34 ஆக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

08 April 2019, 16:14