தேடுதல்

Vatican News
மன்னர் 5ம் முகம்மதுவின் சமாதி நிறுவப்பட்டிருக்கும் நினைவிடத்தில் திருத்தந்தை மன்னர் 5ம் முகம்மதுவின் சமாதி நிறுவப்பட்டிருக்கும் நினைவிடத்தில் திருத்தந்தை  (ANSA)

மன்னர் 5ம் முகம்மது நினைவிடத்தில் திருத்தந்தை

இரண்டாம் டூர் ஹசான் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் 5ம் முகம்மதுவின் நினைவிடத்தில், திருத்தந்தை, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மொராக்கோ நாட்டில் இருநாள் திருத்தூதுப் பயணத்தை, இச்சனிக்கிழமை பிற்பகலில் துவங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் டூர் ஹசான் வளாகத்தில், அந்நாட்டு மன்னர், 6ம் முகமது அவர்கள் வழங்கிய அரச வரவேற்பு நிகழ்வில் முதலில் கலந்துகொண்டார். பின்னர், மன்னர் 5ம் முகம்மதுவின் சமாதி நிறுவப்பட்டிருக்கும் நினைவிடத்திற்குச் சென்றார்.

இரண்டாம் டூர் ஹசான் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், நவீன மொராக்கோவின் தந்தை என்றழைக்கப்படும் மன்னர் 5ம் முகம்மதுவின் கல்லறை, அவரது மகன் மௌலாய் அப்தெல்லாவின் கல்லறை, மற்றும், 5ம் முகம்மதுவின் சகோதரரும், 1961ம் ஆண்டு முதல், 99ம் ஆண்டு வரை அந்நாட்டை ஆண்டவருமான மன்னர் 2ம் ஹசான் கல்லறை ஆகியவை உள்ளன.

மன்னர் 6ம் முகம்மது அவர்களுடன் இந்த நினைவிடத்திற்குச் சென்ற திருத்தந்தை, அங்கு மலர் வளையம் ஒன்றை வைத்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து வெளியேறும்முன், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், "மொராக்கோ நாட்டின் வளத்திற்காகவும், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உடன்பிறந்த உணர்வும், ஒருமைப்பாடும் வளரவேண்டும் எனவும் இறைவனை நோக்கி வேண்டுகிறேன். எனக்காகச் செபியுங்கள்" என்ற சொற்களை எழுதி, கையெழுத்திட்டார், திருத்தந்தை. அந்த நினைவிடத்திலிருந்து 3.6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மன்னர் மாளிகை நோக்கி பயணமானார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மாளிகை, 1785ம் ஆண்டு முதல், மொராக்கோ ஆட்சியாளர்களின் உறைவிடமாகவும், நிர்வாகத் தலைமையகமாகவும் செயல்பட்டது. சுல்தான் 3ம் முகம்மது அவர்களால் கட்டப்பட்ட இம்மாளிகை, 1864ம் ஆண்டு, சுல்தான் 4ம் முகம்மது அவர்களால் மீண்டும் வடிவமைக்கப்பட்டது. பாரம்பரிய கட்டடக்கலையின் வடிவமாக, ஒரு பெரிய சதுக்கத்தில், 7 கதவுகளைக் கொண்டு, இம்மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தொழுகைக்கென சிறிய மசூதி ஒன்றும் இச்சதுக்கத்தில் உள்ளது. இந்த அரச மாளிகையும், அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும், ஒரு சிறிய நகரம் போல் காட்சியளிக்கின்றன. இங்குள்ள கட்டடங்களில், பிரதமர் அலுவலகம், மதம் சார்ந்த விவகாரங்கள் துறை அலுவலகம், அரச பாதுகாப்புப்படை அலுவலகம் உட்பட, ஏறத்தாழ 2,000 பேர் பணிபுரியும் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

31 March 2019, 15:57