தேடுதல்

Vatican News
மொராக்கோ நாட்டு மக்களுக்கு திருத்தந்தை அனுப்பியக் காணொளிச் செய்தி மொராக்கோ நாட்டு மக்களுக்கு திருத்தந்தை அனுப்பியக் காணொளிச் செய்தி   (@vaticanmedia)

மொராக்கோ மக்களுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைப் போல, தானும், அமைதியையும், உடன்பிறந்த உணர்வையும் கொண்ட ஒரு திருப்பயணியாக, மொராக்கோ நாட்டிற்கு வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைப்பவரும், கருணை உள்ளவருமான இறைவன், மனிதரைப் படைத்து, உடன் பிறந்த உணர்வுடன் வாழ்வதற்கு, அவர்களை, இவ்வுலகில் வைத்துள்ளார் என்பதை, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம்புகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

மார்ச் 30, 31 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொராக்கோ நாட்டில் தன் 28வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் வேளையில், அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள ஒரு காணொளிச் செய்தியில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கூறியுள்ளார்.

'அன்பு மொராக்கோ மக்களே' என்ற சொற்களுடன் ஆரம்பமாகும் இச்செய்தியில், 'சமாதானம் உங்களோடு இருப்பதாக' என்ற வாழ்த்துரையைக் குறிக்க, இஸ்லாமியர் பொதுவாகப் பயன்படுத்தும் As-Salamu Alaikum என்ற சொற்களையும் திருத்தந்தை பயன்படுத்தியுள்ளார்.

மொராக்கோ நாட்டுக்குத் தன்னை அழைத்துள்ள மன்னர் 6ம் முகம்மது அவர்களுக்கு நன்றி கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு முன்னர், அந்நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 2ம் ஜான் பால் அவர்களைப் போல, தானும், அமைதியையும், உடன்பிறந்த உணர்வையும் கொண்ட ஒரு திருப்பயணியாக, மொராக்கோ நாட்டிற்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

படைத்தவராகிய இறைவன், நம் பொறுப்பில் ஒப்படைத்துள்ள பொதுவான இல்லமான இந்தப் பூமிக்கோளத்தை, நல்ல முறையில் பேணிக்காத்து, நம் வருங்கால சந்ததியருக்கு வழங்கவேண்டும் என்ற கருத்தை, தான் மொராக்கோ மக்களுடன் பகிர்ந்துகொள்ள வருவதாக திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பயணத்தில், மொராக்கோ நாட்டில் வாழும் கிறிஸ்தவ குழுமத்தைச் சந்திப்பதோடு, குடிபெயர்ந்து அந்நாட்டில் வாழ்வோரையும் தான் சந்திக்கவிருப்பதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவருமே, நீதியும், ஒற்றுமையும் நிறைந்த உலகை உருவாக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் 30, இச்சனிக்கிழமை காலை 10.45 மணிக்குத் துவங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 28வது திருத்தூதுப் பயணம், மார்ச் 31, ஞாயிறு மாலை 9.30 மணிக்கு நிறைவடையும்.

28 March 2019, 13:49