தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா, அவரது துணைவியார் திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா, அவரது துணைவியார்  (ANSA)

திருத்தந்தையின் 6ம் ஆண்டு தலைமைப் பணி நிறைவுக்கு வாழ்த்து

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, உடன்பிறந்த உணர்வு, நம்பிக்கை என்ற உண்மைகளை அனைத்து மதத்தினருக்கும், இனத்தவருக்கும் வலியுறுத்தி வருகிறார் – இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பேதுருவின் வழித்தோன்றலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 6 ஆண்டு பணியை நிறைவு செய்யும் வேளையில், இத்தாலிய மக்கள் சார்பாக அவரை வாழ்த்துவதாகவும், அவர் நல்ல உடல்நலனுடன் தொடர்ந்து உழைக்க வாழ்த்துவதாகவும் இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

மார்ச் 19, இச்செவ்வாய், புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பணியேற்ற 6ம் ஆண்டு  நிறைவையொட்டி, தன் வாழ்த்துக்களை வெளியிட்ட அரசுத்தலைவர் மத்தரெல்லா அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற முதல் திருத்தந்தை என்பதை, இவ்வாழ்த்துச் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

அமைதி, உடன்பிறந்த உணர்வு, நம்பிக்கை என்ற உண்மைகளை அனைத்து மதத்தினருக்கும், இனத்தவருக்கும் வலியுறுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, உரையாடலை மேற்கொள்ள அனைவரையும் தூண்டி வருகிறார் என்று அரசுத்தலைவர் மத்தரெல்லா அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

இத்தாலி நாட்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களையடுத்து, திருத்தந்தை அப்பகுதிகளுக்கு சென்றது, அவரிடம் விளங்கும் மென்மையான, பரிவுள்ள உள்ளத்தை வெளிப்படுத்துகிறது என்றும், சமுதாயத்தில் நலிந்தோர்க்கு அவர் காட்டிவரும் தனிப்பட்ட அக்கறை அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் அரசுத்தலைவர் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

20 March 2019, 15:21