இரண்டாம் டூர் ஹசான் வளாகத்தில் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ரபாட் நகரிலுள்ள இரண்டாம் டூர் ஹசான் என்ற இந்த வளாகம், ஓங்கி உயர்ந்த கோபுரம் ஒன்றையும் பளிங்கு கற்களால் பதிக்கப்பட்ட விரிந்த தரையையும், சிறு சிறு தூண்களையும் கொண்டுள்ளது. இது இருபதாயிரம் பேர் நிற்கும் வசதியுடையது. அரச குலத்திற்குரிய தலைநகராக ரபாட்டை உருவாக்கும் நோக்கத்தில், 1196ம் ஆண்டு, ஒரு மசூதியை இந்த இடத்தில் கட்டத் துவங்கினார், சுல்தான் அபு யூசூஃப் யாக்கூப் அல்-மன்சூர் அவர்கள். ஆனால் இந்தக் கட்டுமானப் பணிகள், மூன்றாண்டுகளில், அதாவது, அவரின் இறப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டன. 80 மீட்டர் உயரமுடையதாக இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்ட இந்த கோபுரம், இன்று 44 மீட்டர் உயரம் கொண்டதாகவும், 16 மீட்டர் அகலமுடையதாகவும் உள்ளது. 1775ம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு பெரிய நில நடுக்கத்தில், இந்த வளாகத்தின் பல தூண்கள் சேதமடைந்தன. 1960ம் ஆண்டுகளிலேயே இதை சீர் செய்யும் பணிகள் துவங்கின. அதே நேரத்தில் மன்னர் 5ம் முகமதுவின் நினைவகத்தின் கட்டுமானமும் துவக்கப்பட்டது.
ரபாட் நகரிலுள்ள இரண்டாம் டூர் ஹசான் வளாகத்தை, ஏறத்தாழ 25 நிமிட சாலை வழிப் பயணத்திற்குப்பின் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் மன்னர் 6ம் முகமது அவர்களும், அவ்வளாகத்தின் முக்கிய வாயிலருகே ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். திருத்தந்தையை நாட்டிற்குக் வரவேற்கும் இந்நிகழ்ச்சியில், முதலில் இரு நாடுகளின் தேசியப் பண்கள் இசைக்கப்பட்டன. இராணுவ அணிவகுப்பு மரியாதைக்குப் பின், இத்திருப்பயணத்தில் திருத்தந்தையுடன் பயணம் செய்யும் முக்கிய அதிகாரிகள் மன்னருக்கும், அரசின் முக்கிய அதிகாரிகள் திருத்தந்தைக்கும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மன்னர் 6ம் முகமது, திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுக்குப்பின், மொராக்கோ நாட்டில் திருத்தூப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய மன்னர், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களிடையே நிலவும் நல்லுறவை சுட்டிக்காட்டிப் பேசினார். திருத்தந்தையும், அந்த வரவேற்பு நிகழ்வில், தன் முதல் உரையை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்