தேடுதல்

Vatican News
பல்கேரியா, வட மாசிடோனியா திருத்தூதுப்பயண விவரங்கள் பல்கேரியா, வட மாசிடோனியா திருத்தூதுப்பயண விவரங்கள் 

பல்கேரியா, வட மாசிடோனியா திருத்தூதுப்பயண விவரங்கள்

பல்கேரியாவில் கத்தோலிக்கர் பெருமளவில் வாழ்கின்ற Rakovsky நகர், இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில், மே 6ம் தேதி காலை 9.30 மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி, சிறார்க்கு புதுநன்மை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே மாதத்தில், பல்கேரியா மற்றும் வட மாசிடோனியாவுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணத்தில், பல்சமய கலந்துரையாடல் நிகழ்வுகளில் கலந்துகொள்வார் மற்றும் புலம்பெயர்ந்தோர் முகாமைப் பார்வையிடுவார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

வருகிற மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, பல்கேரியா மற்றும் வட மாசிடோனியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூன்று நாள் திருத்தூதுப்பயணத்தில், கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நகரமான Skopjeல், ஏழைகளைச் சந்திப்பார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் மார்ச் 07, இவ்வியாழனன்று அறிவித்தது. 

பல்கேரியாவில் கத்தோலிக்கர் பெருமளவில் வாழ்கின்ற Rakovsky நகர், இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில், மே 6ம் தேதி காலை 9.30 மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி,  சிறார்க்கு புதுநன்மை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எழுபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற பல்கேரியாவில், பெரும்பான்மையினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் கத்தோலிக்கர் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே.

மே 5ம் தேதி, பல்கேரியத் தலைநகர் Sofia செல்லும் திருத்தந்தை, அரசு அதிகாரிகள், ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஏனைய மதத் தலைவர்களையும் சந்திப்பார். மேலும், அந்நகரில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டிலும் கலந்துகொள்வார், திருத்தந்தை.

வட மாசிடோனியா

மே 7ம் தேதி செவ்வாயன்று, வட மாசிடோனிய குடியரசின் Skopje நகர் செல்லும் திருத்தந்தை, அந்நகரில் மாலை 6.30 மணிக்கு பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, அன்று இரவு 8.30 மணிக்கு உரோம் வந்து சேர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாசிடோனிய குடியரசில், ஏறக்குறைய 64 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், 33 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கரும் பிற கிறிஸ்தவ சபையினரும் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவே.

வட மாசிடோனிய குடியரசு, 1991ம் ஆண்டில் முன்னாள் யுக்கோஸ்லாவியாவிலிருந்து விடுதலை பெற்ற பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாடு செல்வது அந்நாட்டில் இடம்பெறும் முதல் திருத்தூதுப்பயணமாகும்.

08 March 2019, 15:30