தேடுதல்

Vatican News
குழந்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (© Vatican Media)

திருத்தந்தையின் Motu Proprio - தொர்னியெல்லியின் தலையங்கம்

திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற மையக் கருத்துடன், வத்திக்கானில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திருத்தந்தையின் Motu Proprio சட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறியோர் மற்றும் வலுவற்றோரைப் பாதுகாக்கும் முறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Motu Proprio சட்டத்தொகுப்பு அறிக்கையைக் குறித்து, வத்திக்கான் செய்தித் தொடர்புத் துறையின் ஆசிரியர், அந்திரேயா தொர்னியெல்லி அவர்கள் சில முக்கிய கருத்துக்களை ஒரு தலையங்கமாக வெளியிட்டுள்ளார்.

திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற மையக் கருத்துடன், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வத்திக்கானில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், திருத்தந்தை, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று, தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

இன்று திருத்தந்தை வெளியிட்ட இந்த அறிக்கையில், முதல் பகுதி அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியிடப்பட்ட சட்டத்தொகுப்பாகவும், இன்னும் இரு பகுதிகள், அந்த அறிக்கையின் விளக்கங்களாகவும் அமைந்திருந்தன என்று கூறும் தொர்னியெல்லி அவர்கள், திருத்தந்தையின் கையொப்பம், முதல் தொகுப்பில் மட்டுமே தேவைப்பட்டது என்றாலும், திருத்தந்தை, தானே முன்வந்து, மூன்று அறிக்கைகளிலும் கையெழுத்திட்டிருப்பது, அவர், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உரோம் நகரிலும், வத்திக்கானிலும் திருஅவைக்காகப் பணியாற்றுவோர் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும், திருப்பீடத்தின் தூதரகங்களில் பணியாற்றுவோருக்கும் இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது, இந்த அறிக்கையின் வழியே தெளிவாக்கப்பட்டுள்ளது என்று, தொர்னியெல்லி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ள இந்த சட்டத் தொகுப்பின் அடிப்படையில், விசுவாசக் கோட்பாட்டு பேராயம், சிறியோரின் பாதுகாப்பு குறித்து கையேடு ஒன்றை தயாரித்து, உலகெங்கிலும் உள்ள மறைமாவட்டங்களுக்கு வழங்கும் என்பதையும், தொர்னியெல்லி அவர்கள் தன் தலையங்கத்தில் கூறியுள்ளார்.

29 March 2019, 14:30