தேடுதல்

Vatican News
உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில்  திருத்தந்தை உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை  (ANSA)

உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை

தவக்காலத் தியானத்தை வழிநடத்த, மார்ச் 26, இன்று காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திற்குத் திடீரென வருகை தந்து, எம்மை வியப்பில் ஆழ்த்தினார் - இலாத்தரன் பல்கலைக்கழகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 26, இச்செவ்வாய் காலை ஒன்பது மணியளவில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். திருத்தந்தையின் இந்த வருகை பற்றி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகம், "இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகம், ஒரு சிறந்த கொடையைப் பெற்றுள்ளது, இன்று காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத் தியானத்தை வழிநடத்த, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திற்குத் திடீரென வருகைதந்து, எம்மை வியப்பில் ஆழ்த்தினார், பல்கலைக்கழக குழுமம், மகிழ்வுடனும், பெருமளவிலும், திருத்தந்தையின் தியான உரைக்குச் செவிமடுத்து, சிறப்பித்தது" என்று தெரிவித்திருந்தது.

உருமேனியா திருத்தூதுப்பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே 31ம் தேதியிலிருந்து ஜூன் 2ம் தேதி வரை, உருமேனியா நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீட செய்தித் தொடர்பகம்.

Transylvanian பகுதியிலுள்ள புகழ்பெற்ற அன்னை மரியா திருத்தலம் உட்பட, ஆறு இடங்களில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயண நிகழ்வுகள் இடம்பெறும் எனவும், இவற்றில், உருமேனிய கம்யுனிச ஆட்சியின்கீழ் இடம்பெற்ற கடுமையான சமய-விரோத நடவடிக்கைகளில் உயிரிழந்த கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவையின் ஏழு ஆயர்களை, அருளாளர்கள் என திருத்தந்தை அறிவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

உருமேனியத் திருத்தூதுப்பயணத்தில், ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்கப் பேராலயங்களில், கீழை வழிபாட்டுமுறை திருவழிபாட்டில் கலந்துகொள்தல், இலத்தீன் வழிபாட்டுமுறை திருப்பலி நிறைவேற்றல், அரசியல் தலைவர்கள், இளையோர், உரோமா இனத்தவர் உட்பட குடும்பங்கள், ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறும்.

உருமேனியத் தலைநகர் Bucharest, இன்னும், Bacau, Iasi, Sibiu, Blaj ஆகிய நகரங்களுக்கும், ஹங்கேரி கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமான திருப்பயணத் தலமாகிய Sumuleu Ciucவிலுள்ள அன்னை மரியா திருத்தலத்திற்கும் திருத்தந்தை செல்வார்.

உருமேனியாவின் ஏறக்குறைய இரண்டு கோடி மக்களில், 82 விழுக்காட்டினர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். நான்கு விழுக்காட்டுக்கும் சற்று அதிகமானோர் கீழை வழிபாட்டுமுறை அல்லது இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் ஆவர்.

இம்மாதத்தில் மொராக்கோ, வருகிற மே மாத துவக்கத்தில் பல்கேரியா, வட மாசிடோனியா ஆகிய நாடுகளுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே இறுதியில் உருமேனியா நாட்டிற்குச் செல்வது அவரின் முப்பதாவது திருத்தூதுப்பயணமாக அமைகின்றது.

26 March 2019, 15:15