தேடுதல்

Vatican News
2018ம் ஆண்டு சனவரி 16ம் தேதி, சிலே நாட்டில், பெண் கைதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2018ம் ஆண்டு சனவரி 16ம் தேதி, சிலே நாட்டில், பெண் கைதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (AFP or licensors)

பெண்கள் உலகை மேலும் அழகுபடுத்துகின்றனர்

தொழில் துறையில் பெண்களுக்கு சமப்பங்களிப்பு வழங்குவதன் வழியாக, உலகளாவிய வளர்ச்சியில் கோடிக்கணக்கான டாலர் பெற வழிவகுக்கும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பெண்களின் உலக நாளாகிய மார்ச் 08, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இவ்வுலகை அழகுள்ளதாக அமைப்பதில் பெண்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பெண்கள் உலகை மேலும் அழகுறச்செய்கின்றனர், அவர்கள் அதைப் பாதுகாத்து, உயிர்த்துடிப்புள்ளதாக்கி வருகின்றனர், புதுப்பித்தலின் அருளைக் கொணர்கின்றனர், எல்லாரையும் இணைத்துக்கொள்கின்றனர் மற்றும், தங்களையே வழங்குவதற்குத் துணிவு கொண்டுள்ளனர்’ என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.

ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரெஸ்

பெண்களை மேம்படுத்துவதும், பாலின சமத்துவமும் உலகளாவிய வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்று, பெண்கள் உலக நாளுக்கென, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

இன்னும் பத்தாண்டுகளில் ஐ.நா. அமைப்பில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு ஐ.நா. முயற்சிகள் எடுத்து வருகின்றது என்றும், கடந்த ஆண்டில் முதன்முறையாக, ஐ.நா.வின் நிர்வாக குழுவில், பாலின சமத்துவநிலை கொண்டுவரப்பட்டது என்றும், கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார். 

உலகளாவிய பெண்கள் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட 1975ம் ஆண்டில், ஐ.நா. நிறுவனம், இப்பெண்கள் உலக நாளைச் சிறப்பிக்கத் தொடங்கியது. (UN)

08 March 2019, 15:31