தேடுதல்

Vatican News
பாதிக்கப்பட்டோருக்கென வழங்கப்படும்  உதவிகள் பாதிக்கப்பட்டோருக்கென வழங்கப்படும் உதவிகள்  (2019 Getty Images)

அலபாமா சூறாவளியில் பாதிக்கப்பட்டோருக்கு தந்தி

அலபாமா சூறாவளியில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்தோருக்கு, இறைவன், ஆறுதலும், நம்பிக்கையும் தரவேண்டுமென்று தான் செபிப்பதாக திருத்தந்தை உறுதியளித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தில், இறைவனின் அன்பை நினைவில் கொள்ளும் வரம் வேண்டும் என்ற கருத்தில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே கருத்தை, தன் டுவிட்டர் செய்தியிலும் வலியுறுத்திக் கூறினார்.

"ஆண்டவர் நம் வாழ்வில் செய்த அனைத்தையும் நினைவில் கொள்ளும் வரத்திற்காக தவக்காலத்தின் துவக்கத்தில் வேண்டுவது நல்லது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமா மாநிலத்தில் வீசிய சூறாவளியில் இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 6, இப்புதனன்று தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

Mobile உயர் மறைமாவட்ட பேராயர் தாமஸ் ரோடி (Thomas J. Rodi) அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்தத் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரோடும், திருத்தந்தை, தன் செபத்தின் வழியே ஒன்றித்திருக்கிறார் என்றும், இறந்தோர் அனைவருக்கும், குறிப்பாக, குழந்தைகளுக்கு இறைவன் ஆன்ம இளைப்பாற்றி வழங்க செபிப்பதாகவும் இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

இச்சூறாவளியின் காரணமாக, தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்தோர் அனைவருக்கும், இறைவன், ஆறுதலும், நம்பிக்கையும் தரவேண்டுமென்று தான் செபிப்பதாக, திருத்தந்தை உறுதியளித்துள்ளார்.

மார்ச் 3ம் தேதி ஞாயிறன்று வீசிய இந்தக் கடுமையான சூறாவளியில், 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர், மற்றும், காணாமல் போயுள்ளனர் என்றும், செய்திகள் கூறுகின்றன.

07 March 2019, 15:12