தேடுதல்

Vatican News
சிலுவையைத் தூக்கும் இளையோருடன் திருத்தந்தை சிலுவையைத் தூக்கும் இளையோருடன் திருத்தந்தை  (ANSA)

சிலுவையில் அறையுண்ட இயேசுவே, விண்ணக திசைகாட்டி

"தவக்காலப் பயணத்தில் நம் பார்வையை எங்கு பதிக்கவேண்டும்? சிலுவையில் அறையுண்டவர் மீது" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தையும், சிலுவையில் அறையுண்ட இயேசுவையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 27, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியைப் பதிவு செய்திருந்தார்.

"தவக்காலப் பயணத்தில் நம் பார்வையை எங்கு பதிக்கவேண்டும்? சிலுவையில் அறையுண்டவர் மீது. சிலுவையின் மீதிருக்கும் இயேசுவே, விண்ணகத்தை நமக்கு சுட்டிக்காட்டும் வாழ்வின் திசைகாட்டி" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரி வழியே, திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

மார்ச் 27, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.914 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, காணொளிகள் மற்றும்,  புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

மார்ச் 26, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகர மேயர் அலுவலகத்திற்கு முன், வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு உரை வழங்கிய புகைப்படம் உட்பட, இதுவரை, instagram முகவரியில், 684 காணொளிகள் மற்றும்,  புகைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 60 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

27 March 2019, 15:32