தேடுதல்

Vatican News
மொராக்கோவில் வரவேற்பு மொராக்கோவில் வரவேற்பு  (Vatican Media)

மொராக்கோவில் நிலவும் மத நம்பிக்கைகள்

மொராக்கோ திருத்தூதுப் பயண இலச்சினையில், கிறிஸ்தவத்தைக் குறிக்கும் விதமாக ஒரு சிலுவையும், இஸ்லாமைக் குறிக்கும் விதமாக ஒரு பிறையும் உளளன, இவை, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள உறவைக் கோடிட்டு காட்டுவதாக உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மொராக்கோ நாட்டில், கி.பி. 2ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. கி.பி. 670ம் ஆண்டில், வட ஆப்ரிக்க கடற்கரைப் பகுதியை, இஸ்லாமியர், முதன்முதலாகக் கைப்பற்றியதையடுத்து, பெர்பெர் (Berber) பழங்குடிமக்கள் இஸ்லாமைப் பின்பற்றினர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மொராக்கோ திருத்தூதுப் பயண இலச்சினையில், கிறிஸ்தவத்தைக் குறிக்கும் விதமாக ஒரு சிலுவையும், இஸ்லாமைக் குறிக்கும் விதமாக ஒரு பிறையும் உளளன, இவை, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள உறவைக் கோடிட்டு காட்டுவதாக உள்ளன.

மொராக்கோவில், 93 விழுக்காட்டினர், மதநம்பிக்கை உடையவர்கள். அந்நாட்டின் அரசியலமைப்புப்படி, இஸ்லாம், அரசு மதமாகும். ஆயினும், வழிபாட்டு சுதந்திரமும் இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டில், பெரும்பாலானவர்கள், சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்நாட்டில், இரண்டாவது பெரிய மதம், கிறிஸ்தவமாக இருந்தாலும், கிறிஸ்தவர்களில், ஏறத்தாழ பலர், வெளிநாட்டவர். அந்நாட்டு குற்றவியல் சட்டத்தின்படி, இஸ்லாம் மத நம்பிக்கைக்கு ஊறுவிளைவிப்பதோ, முஸ்லிம்களை, மதம் மாற்றுவதோ, குற்றமாகும். இக்குற்றத்திற்கு, சிறைத்தண்டனையும், அபராதமும் உண்டு.

நாளை, மார்ச் 31, ஞாயிறன்று ரபாட் பேராலயத்தில் அருள் பணியாளர்கள், துறவியர், மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து, உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று பிற்பகல், விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்குவார். ஞாயிறு மாலை 5.15 மணிக்கு மொராக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு 9.30 மணிக்கு உரோம் நகர் சம்பீனோ விமான நிலையம் வந்தடைவார். இத்துடன் திருத்தந்தையின் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவு பெறும்.

30 March 2019, 15:28