தேடுதல்

Vatican News
இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் தவக்கால தியான உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் தவக்கால தியான உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருத்தந்தையின் தவக்கால தியான உரை

இயேசுவின் உதவியும், தூய ஆவியாரின் தென்றலும், ஒருவரைச் சூழும்போது, அவர், எந்த ஒரு நெருப்பினாலும் தீண்டப்படாமல் காக்கப்படுவார் - திருத்தந்தையின் தவக்கால தியான உரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 26, இச்செவ்வாய் காலை ஒன்பது மணியளவில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திற்குச் சென்று, பல்கலைக்கழக அரங்கத்தில் குழுமியிருந்தோருக்கு தவக்கால தியான உரை ஒன்றை வழங்கினார்.

இச்செவ்வாய் காலை திருப்பலியில், தானியேல் நூலிலிருந்து முதல் வாசகமாக வழங்கப்பட்டிருந்த பகுதி வாசிக்கப்பட்டபின், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசரால் நெருப்பில் வீசியெறியப்பட்ட மூன்று இளையோரைப் பற்றி தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இன்றும், இத்தகையக் கொடுமைகளை கிறிஸ்துவுக்காக ஏற்கும் இளையோர் உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

இயேசுவின் உதவியும், தூய ஆவியாரின் தென்றலும், ஒருவரைச் சூழும்போது, அவர், எந்த ஒரு நெருப்பினாலும் தீண்டப்படாமல் காக்கப்படுவார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாத்தரன் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

அனைத்து கலாச்சார உணர்வுகளையும், மழுங்கச்செய்யும் வண்ணம், இன்றைய இளைய சமுதாயத்தைச் சூழ்ந்திருக்கும் மயக்க நிலையின் நடுவே, இயேசுவிலும், அவரது நற்செய்தியிலும் ஊன்றியிருப்போர், காயப்படாமல் கடந்து செல்ல முடியும் என்பதை, திருத்தந்தை தன் தியான உரையில் வலியுறுத்திக் கூறினார்.

சுயநலத்தை விட்டு வெளியேறி, தீர்க்கமாகத் தெளிந்து தெரியும் மனநிலையை வளர்த்துக்கொள்வது, சிறந்ததொரு கல்விப் பயணமாக இருக்கும் என்றும், இத்தகைய பயணம், நம்மை, வாழ்வின் எதார்த்தங்களைவிட்டு விலகிச் செல்லாமல் காக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இறை மக்களுடன் இணைந்து, நாம் மேற்கொள்ளும் உலகப் பயணத்திலிருந்தும், வரலாற்றிலிருந்தும் நம்மைப் பிரித்துக்கொள்ளாமல், சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்வதே, நமது கல்வியின் முக்கிய நோக்கம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தியான உரையில் வலியுறுத்தினார்.

27 March 2019, 15:47