தேடுதல்

Vatican News
இரண்டாம் டூர் ஹாசன் வளாகத்தில் உரை வழங்கிய திருத்தந்தை இரண்டாம் டூர் ஹாசன் வளாகத்தில் உரை வழங்கிய திருத்தந்தை  (AFP or licensors)

வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தை வழங்கிய உரை

மத சகிப்புத் தன்மை என்பதையும் தாண்டி, மற்றவர்களை அவர்களின் நம்பிக்கைகளோடும் வேறுபாடுகளோடும் மதிக்கும் நிலைக்கு நாம் உயரவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயற்கை அழகையும், தொன்மை கலாச்சாரத்தையும், வரலாற்றையும் கொண்டுள்ள மொராக்கோ நாட்டில் நான் திருப்பயணம் மேற்கொள்ள, மன்னர் 6ம் முகமது அவர்கள் விடுத்த அழைப்பிற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிடுகிறேன். கிறிஸ்தவ, மற்றும், இஸ்லாம் மதங்களிடையே, உரையாடலையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதலையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பை, இத்திருப்பயணம் வழங்குவது குறித்து மகிழ்கிறேன்.

அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்களுக்கும் சுல்தான் அல்-மாலிக் அல்-கமால் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் 800ம் ஆண்டை சிறப்பிக்கும் காலத்தில் நாம் உள்ளோம். தீவிரவாதப் போக்குகளால் உலகம் பிளவுறும் என்பதை நினைவில் கொண்டு, நட்பின் கரங்களை நீட்ட நாம் அழைக்கப்படுகிறோம். மனித குலத்திற்கு நல்லதொரு வருங்காலத்தை அமைத்து கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது.

திறந்த மனதும், உடன்பிறந்த உணர்வும் கொண்டு, வேறுபாடுகளை மதித்து செயல்படுவது, கருத்துப் பரிமாற்ற கலாச்சாரத்திற்கு இன்றியமையாதது. பதட்ட நிலைகளையும், தவறாகப் புரிந்துகொள்ளுதலையும் களைவதற்கும் இது இன்றியமையாதது. மத தீவிரவாதப் போக்குகளையும் அடிப்படைவாதப் போக்குகளையும் எதிர்த்துப் போரிட, மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருமித்த மனதுடன் செயல்படுவது அவசியம். மக்களிடையே பாலங்களை கட்டியெழுப்புவதில் மதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது, அங்கீகரித்து, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். உரிமைகள், கடமைகள், மாண்பு என, அனைத்திலும் சரிநிகர் தன்மையுடன் வாழ, இறைவன், மனிதர்களை படைத்துள்ளார். நாமும் சகோதர சகோதரிகளாகச் செயல்பட்டு, நன்மைத்தனம், அன்பு மற்றும் அமைதி எனும் மதிப்பீடுகளை பரப்ப கடமைப்பட்டுள்ளோம்.

இத்தகையச் சூழலில்தான், மதசுதந்திரம் என்பது மனித மாண்புடன் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளதைக் காண்கிறோம். மத சகிப்புத் தன்மை என்பதையும் தாண்டி, மற்றவர்களை அவர்களின் நம்பிக்கைகளோடும் வேறுபாடுகளோடும் மதிக்கும் நிலைக்கு நாம் உயரவேண்டும். அதன் வழியாக, நாம் ஒன்றிணைந்து உழைத்து, உலகில் நட்புணர்வையும், உடன்பிறந்த உணர்வையும் வளர்க்க முடியும்.  

2016ம் ஆண்டு சனவரி மாதம், 'இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைகள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று இந்நாட்டின் மரக்கேஷ் நகரில் நடைபெற்றதை இந்நேரத்தில் நினைவு கூர்கின்றேன். மதத்தின் பெயரால் பிறரைச் சுரண்டுவது, பாகுபாட்டுடன் நடத்துவது, தாக்குவது போன்றவற்றை வன்மையாக கண்டித்தது, அக்கருத்தரங்கு. வன்முறைகளுக்கு வழிவகுக்கும் வகையில் மதத்தை தவறாக பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். உலகில் இயற்கையை பாதுகாக்கவும், ஏழ்மையை ஒழிக்கவும் நம் அனைவரின் ஒன்றிணைந்த உழைப்பு தேவைப்படுகிறது. நாம் ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய துறைகள் நிறைய உள்ளன. எடுத்துக்காட்டாக, புலம்பெயர்வோர் பிரச்னை. இன்றைய புலம்பெயர்தல் பிரச்னையை எதிர்நோக்கும் உலகு, அதற்கான காரணங்களை கண்டுணர்ந்து அகற்ற முன்வர வேண்டும்.

இந்நேரத்தில், மொராக்கோ தலத்திருஅவை, சமூகத் துறையிலும், கல்வித்துறையிலும் ஆற்றிவரும் சிறப்பு பங்களிப்பை குறிப்பிட விரும்புகிறேன். மனித சகோதரத்துவத்தின் பாதுகாப்பாளர்களாகவும், பணியாளர்களாகவும் பொது நலனுக்காக தொடர்ந்து செயல்பட கத்தோலிக்கர்களுக்கு ஊக்கமளிக்கிறேன், என தன் முதல் உரையை மொராக்கோ நாட்டில் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

30 March 2019, 15:15