தேடுதல்

Vatican News
ரபாட் மறைமாவட்ட காரித்தாஸ் மையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ரபாட் மறைமாவட்ட காரித்தாஸ் மையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

காரித்தாஸ் மையத்தில் புலம் பெயர்ந்தோருடன் திருத்தந்தை

மொராக்கோவின் காரித்தாஸ் மையம், அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, மாற்றுத்திறனாளிக்கு பணியாற்றுவதோடு, வெளிநாடுகளிலிருந்து மொராக்கோ நாட்டில் அடைக்கலம் தேடி வருவோருக்கும் சிறப்பான பணியாற்றி வருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மன்னர் 6ம் முகம்மது நிறுவனத்தில் நிகழ்ந்த சந்திப்பை முடித்து, அங்கிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள மறைமாவட்டக் காரித்தாஸ் மையம் நோக்கி காரில் பயணமானார், திருத்தந்தை பிரான்சிஸ். மொராக்கோவின் காரித்தாஸ் மையம், அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, மாற்றுத்திறனாளிக்கு பணியாற்றுவதோடு, வெளிநாடுகளிலிருந்து மொராக்கோ நாட்டில் அடைக்கலம் தேடி வருவோருக்கும் சிறப்பான பணியாற்றி வருகிறது.

காரித்தாஸ் மையத்தில், புலம் பெயர்ந்தோர், மற்றும் குடிப்பெயர்ந்தோருடன் சந்திப்பை மேற்கொள்ளச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மொராக்கோவின் Tanger உயர்மறைமாவட்டத்தின் பேராயர், Santiago Agrelo Martínez அவர்கள் வரவேற்றுப் பேசினார். அங்கு குழுமியிருந்த 80 புலம்பெயர்ந்தோரின் பிரதிநிதியாக ஒருவர் தன் வாழ்வுச் சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டார். பின்னர், திருத்தந்தை அங்கிருந்தோருக்கு தன் உரையை வழங்கினார்.

காரித்தாஸ் மையத்தில் நடைபெற்ற சந்திப்பை நிறைவு செய்து, மாலை 7 மணிக்கு, அங்கிருந்து 8.8 கி.மீ. தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். தூதரகத்திற்குமுன் நிறைய குழந்தைகளும், கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களும் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசியத் திருத்தந்தை, அங்கிருந்த குழந்தைகளை கையில் வாங்கி, முத்தமிட்டார். இளம் சிறாரைச் சந்தித்த இந்நிகழ்வுடன், மொராக்கோ நாட்டில் திருத்தந்தையின் முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

31 March 2019, 15:39