தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

சிறியோரின் பாதுகாப்பு – திருத்தந்தையின் Motu Proprio

சிறியோரையும், நலிவுற்றவர்களையும் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கிய Motu Proprio சட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறியோரையும், பல்வேறு வழிகளில் நலிவுற்றவர்களையும் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘தன் சுய விருப்பத்தின் அடிப்படை’யில் உருவாக்கிய Motu Proprio என்றழைக்கப்படும் சட்டத் தொகுப்பு ஒன்று, மார்ச் 29, இவ்வெள்ளியன்று, வெளியிடப்பட்டது.

"இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்" (மத்தேயு 18:5) என்ற சொற்களை இத்தொகுப்பின் ஆரம்பத்தில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறியோர் மற்றும் நலிவுற்றவர்களை காப்பது, நற்செய்தியின் முக்கியமான ஒரு செய்தி என்றும், இதனை உலகெங்கும் பரப்புவது, திருஅவைக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்றும் கூறியுள்ளார்.

இந்த முயற்சியில் தொடர்ச்சியான, ஆழமான மனமாற்றம் எப்போதும் தேவை என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை, நம்பத்தகுந்த வகையில் அறிவிப்பதற்கு, தனிப்பட்டவரின் புனிதமும், நன்னெறியின் அர்ப்பணமும் தேவை என்பதை தன் சட்டத்தொகுப்பின் துவக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்.

வத்திக்கான் நாட்டிலும், உரோமையிலும், உலகின் பல நாடுகளிலும் இயங்கிவரும் திருப்பீடத்தின் உயர் மட்ட அலுவலகங்கள் அனைத்திலும், தான் வெளியிட்டுள்ள சட்டங்கள், ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்பதை திருத்தந்தையின் அறிக்கை கூறியுள்ளது.

சிறியோருக்கும், வலுவற்றோருக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றங்களில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் யாருக்கு உண்டு என்பது, 2013ம் ஆண்டு ஜூலை மாதம் தான் வெளியிட்ட சட்டத்தொகுப்பிலும், தற்போது வெளியிட்டுள்ள சட்டத்தொகுப்பிலும், கூறப்பட்டுள்ளதென திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய குற்றங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டிய வழிமுறைகளையும், இதனால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படவேண்டிய உதவிகளையும் திருத்தந்தை தன் சட்டத்தொகுப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், திருப்பீடத்தின் உயர் மட்ட அளவில் பணியாற்ற தெரிவு செய்யப்படும் வழிமுறைகளில் மிக கவனமான கண்காணிப்பு தேவை என்பதையும், குறிப்பாக, தெரிவு செய்யப்படவிருப்பவர் சிறியோருடனும், வலுவற்றோருடனும் எவ்வகையில் பழகினார் என்பது குறித்த பின்னணி ஆய்வு மிகவும் அவசியம் என்பதையும், திருத்தந்தை தன் Motu Proprio சட்டத் தொகுப்பில் கூறியுள்ளார்.

29 March 2019, 14:10