தேடுதல்

Vatican News
சபீனா ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  சபீனா ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

பிரேசில் தவக்கால முயற்சிக்கு திருத்தந்தையின் செய்தி

மக்களுக்காகப் பணியாற்றும் ஆழ்மன உந்துதலுடன் அரசியலில் ஈடுபடுவோர், சமுதாயப் பொதுநலனை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு பணியாற்ற வேண்டும் – திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொதுநலக் கொள்கைகள் என்பது, பொதுவாக அரசுகளின் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தாலும், அக்கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் மக்களாகிய நமக்கும் பெரும் பங்கு உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

"உடன்பிறந்தோர் கொள்கை பரப்பு முயற்சி 2019"

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தில், "உடன்பிறந்த நிலை கொள்கை பரப்பு முயற்சி" என்ற பெயரில், பிரேசில் ஆயர் பேரவை மேற்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு நடத்தப்படும் கொள்கைப்பரப்பு முயற்சிக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு தவக்காலத்திற்கென்று, பிரேசில் ஆயர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த முயற்சி, "உடன்பிறந்தத் தன்மையும், பொதுநலக் கொள்கைகளும்" என்ற தலைப்பையும், "நீதி உங்களை மீட்கும்; நேர்மை உங்களை விடுவிக்கும்" (காண்க. எசாயா 1,27) என்ற மையக்கருத்தையும் கொண்டிருப்பதை, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புளிப்பு மாவாகச் செயல்படும் பொதுநிலையினர்

தென் அமெரிக்க நாடுகளில் உள்ள பொதுநிலையினர், நீதியோடும், நேர்மையோடும் வாழும்போது, அவர்கள் சமுதாயத்தை மாற்றும் புளிப்பு மாவாகச் செயல்படுகின்றனர் என்றும், அதுவே, அவர்கள் திருமுழுக்கில் பெற்ற அழைப்பு என்றும், திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு சிறப்பான விண்ணப்பம்

அரசியலில் ஈடுபட்டுள்ளோருக்கு தான் சிறப்பான விண்ணப்பம் விடுப்பதாக இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களுக்காகப் பணியாற்றும் ஆழ்மன உந்துதலுடன் அரசியலில் ஈடுபடுவோர், சமுதாயப் பொதுநலனை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வாண்டு துவங்கியுள்ள தவக்காலப் பயணத்தில், கிறிஸ்துவின் காயப்பட்ட உடலாக விளங்கும் வறியோர் மற்றும் தேவையில் இருப்போருடன் இந்தப் பயணம் தொடரவேண்டும் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

06 March 2019, 14:33