தேடுதல்

Vatican News
ஈரான் நாட்டின் Golestan பகுதியைச் சூழ்ந்துள்ள வெள்ளம் ஈரான் நாட்டின் Golestan பகுதியைச் சூழ்ந்துள்ள வெள்ளம்  (ANSA)

ஈரான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபச் செய்தி

ஈரான் நாட்டு வெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆன்மாக்களை கருணையுள்ள கடவுளின் அன்பில் ஒப்படைப்பதாக, திருத்தந்தையின் அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெள்ளத்தினால் உயிரிழந்தோர், மற்றும், பாதிக்கப்பட்டோருக்கு, தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

வெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆன்மாக்களை கருணையுள்ள கடவுளின் அன்பில் ஒப்படைப்பதாகவும், சொந்தங்களை இழந்தோருக்கு ஆறுதலும் உறுதியும் இறைவன் வழங்கும்படியும் தான் செபிப்பதாக திருத்தந்தை விடுத்துள்ள இச்செய்தியினை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இந்த பேரிடர் வேளையில், மக்களைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளும் அனைவருக்காகவும், மற்றும், ஈரான் மக்கள் அனைவருக்காகவும் தான் இறைவனிடம் செபிப்பதாக, திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டில் பெய்த கன மழை காரணமாக, இச்செவ்வாயன்று, நதிகளில் உருவான திடீர் வெள்ளத்தில், இதுவரை, 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர் என்றும், செய்திகள் கூறுகின்றன.

ஈரான் நாட்டில், Nowruz என்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிகழ்ந்துவருவதையடுத்து, மக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொண்ட வேளையில், இந்த திடீர் வெள்ளம் உருவானது, பலரது உயிரிழப்பிற்கு காரணமானது என்று சொல்லப்படுகிறது.

27 March 2019, 15:42