தேடுதல்

Vatican News
புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளருடன், திருத்தந்தை பிரான்சிஸ் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளருடன், திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தை வழங்கிய தவக்கால தியான உரை

தவக்காலம், இறைவனின் அன்பை மீண்டும் சுவைத்து உணர்வதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரம். மக்கள் இந்த அன்பைச் சுவைக்க உதவி செய்வது அருள்பணியாளர்களின் முக்கிய கடமை - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் துவக்கத்தில் இறைவனின் மன்னிப்பைப் பெற்றுத்தரும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்வது, நம் மனதில் பெரும் அமைதியை உருவாக்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 7 இவ்வியாழன் காலை வழங்கிய ஒரு தியான உரையில் கூறினார்.

தவக்காலம், புதுப்பிக்கும் காலம்

உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கென, இவ்வியாழன் காலை 11 மணியளவில், புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பில், திருத்தந்தை வழங்கிய தியான உரையில், இறைவனின் இரக்கத்தை உணர்ந்து, நம்மையே புதுப்பித்துக்கொள்ள, தாய் திருஅவை, தவக்காலத்தை வழங்கியுள்ளார் என்று கூறினார்.

நம்மில் நாமே நிறைவுகாணும் சோதனைக்கு உட்பட்டு, இறைவனின் குழந்தைகளாக மாறுவது நம் ஒவ்வொருவரின் தகுதி என்ற எண்ணம் தலைதூக்கும்போது, அருள்பணியாளர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தியான உரையில் குறிப்பிட்டார்.

2025 யூபிலி ஆண்டுக்கு 7 ஆண்டுகள் தயாரிப்பு

நெருங்கிவரும் 2025ம் ஆண்டு சிறப்பிக்கப்படவிருக்கும் யூபிலி ஆண்டுக்கு ஒரு தயாரிப்பாக, 2018ம் ஆண்டு ஏழாண்டுகள் முயற்சி ஒன்று உரோம் மறைமாவட்டத்தில் துவக்கப்பட்டதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த ஏழு ஆண்டுகளில் இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட விடுதலைப்பயணத்தை நம் உருவகமாகக் கொண்டு தியானித்து வருகிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.

நம்மோடு இணைந்து வர மறுக்கும் இறைவன்

'வணங்கா கழுத்தும்' (வி.ப. 32:9), 'தீமை செய்வதில் நாட்டமும்' (வி.ப. 32:22) கொண்ட இஸ்ரயேல் மக்களுடன் இறைவன் இணைந்து நடக்க மறுத்தார் என்பதை தன் தியான உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, நமது இறுகிய உள்ளத்தால், கடவுள் நம்மோடு இணைந்து வர மறுக்கக்கூடும் என்பதை தெளிவுபடுத்தினார்.

உயிர்த்த ஆண்டவர் நம் செயல்பாடுகள், வழிபாடுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறினால், நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியை எழுப்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளைகளில் நம்மை நாமே மையப்படுத்தி, உலக வழிகளுக்கு உட்பட்டு நம் செயல்பாடுகளும், முடிவுகளும் அமைந்துவிடும் என்றும், அது, ஒருவகையில் நம் மரண நிலை என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தன்னையே மீண்டும் வெளிப்படுத்தும் இறைவன்

இறைவன் இல்லாமல் நாம் தனித்துவிடப்படும் சூழலில், இறைவன், மோசேக்கு தன்னை வெளிப்படுத்தியதைப்போல், தன் இரக்கத்தின் காரணமாக நமக்கும் தன்னையே வெளிப்படுத்துவார் என்று கூறியத் திருத்தந்தை, "ஆண்டவர், இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்." (வி.ப. 34:6) "எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்" (வி.ப. 33:14) என்ற இறை வாக்கியங்களை மேற்கோள்களாக வழங்கினார்.

தவக்காலம், இறைவனின் அன்பை மீண்டும் சுவைத்து உணர்வதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் என்று தன் தியான உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அன்பை நாம் தனிப்பட்ட முறையில் உணரவும், நம் மக்கள் இந்த அன்பைச் சுவைக்க உதவி செய்வதும் அருள்பணியாளர்களின் முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.

கடினமான ஒப்புரவுப் பணி

கடவுளையும், மனிதர்களையும் ஒப்புரவாக்கும் பணியை மேற்கொள்ள அருள்பணியாளர்கள் தயங்கக்கூடாது என்பதை, தன் தியான உரையின் இறுதிப் பகுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, ஒப்புரவாக மறுக்கும் இன்றைய உலகில், ஒப்புரவை நோக்கி அருள்பணியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் கடினமாக மாறுகின்றது என்றும், அவர்களை, மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அவர்களைக் குறித்து அவதூறுகளைப் பரப்பும் சூழல்களும் உருவாகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

08 March 2019, 10:00