தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் ஆறு ஆண்டுகள் பணிக்கு வாழ்த்துக்கள்

திருப்பீடத்திலும், திருஅவையிலும் மாற்றங்களைக் கொணர திருத்தந்தை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, இத்தாலிய ஆயர்கள் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் சகோதரர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் பணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு திருப்பீட பொறுப்பாளர்கள் அனைவரின் சார்பில், கர்தினால் ஜியோவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தன் நன்றியைக் கூறினார்.

மார்ச் 13, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, இப்புதன் காலை, அவர் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னதாக, ஆயர்கள் பேராயத்தின் முன்னாள் தலைவர், கர்தினால் ரே அவர்கள், திருத்தந்தைக்கு தன் வாழ்த்துக்களையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்.

அரிச்சா எனுமிடத்தில், தெய்வீகப் போதகர் இல்லத்தில், திருத்தந்தையும், திருப்பீட பொறுப்பாளர்கள் 64 பேரும் கடந்த ஞாயிறு மாலை முதல் ஈடுபட்டிருக்கும் தவக்காலத் தியானத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை, நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், திருப்பீட பொறுப்பாளர்கள் அனைவரும் திருத்தந்தையுடன் ஒன்றித்துள்ளனர் என்பதை, கர்தினால் ரே அவர்கள், தன் வாழ்த்துரையில் கூறினார்.

மேலும், இத்தாலிய ஆயர் பேரவை சார்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வாழ்த்தி அனுப்பப்பட்டச் செய்தியில், திருப்பீடத்திலும், திருஅவையிலும் மாற்றங்களைக் கொணர திருத்தந்தை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, இத்தாலிய ஆயர்கள் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர்.

இத்தாலிய மக்கள் அனைவரோடும் இணைந்து, தாங்களும், தூய ஆவியாரிடம் எழுப்பும் செபங்கள் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நல்ல உடல் நலத்தையும், தூய ஆவியாரின் வழிநடத்தலையும் வேண்டுவதாக இத்தாலிய ஆயர்களின் செய்தி கூறுகிறது.

13 March 2019, 15:15