தேடுதல்

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாள் அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாள் 

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாள், பிப்ரவரி 2

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் உலக நாளை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1997ம் ஆண்டில் உருவாக்கினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் 23வது உலக நாளான பிப்ரவரி 02, இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூட்டுத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுகிறார்.

துறவற வாழ்வின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் உலகளாவிய தன்மையைக் குறிக்கும் விதமாக, இத்திருப்பலிக்கு முன்னர், பல துறவு சபைகளைச் சேர்ந்த ஐம்பது இருபால் துறவியர் எரியும் மெழுகுதிரிகளுடன் பவனியாகச் செல்கிறார்கள்.

இயேசு பிறந்த நாற்பதாம் நாளான, பிப்ரவரி 2ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும், இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவாக திருஅவை சிறப்பிக்கின்றது. இதே நாள், அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாளாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த உலக நாளை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1997ம் ஆண்டில் உருவாக்கினார்.

துறவியர் அழைத்தலுக்கு நன்றி

இந்த உலக நாள் பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட துறவியர் பேராயத் தலைவர், கர்தினால் Braz de Aviz அவர்கள், துறவிகள் தங்களையே மற்றவருக்கு

வழங்காதபோது, அவர்கள் தங்கள் வாழ்வில் தளர்ச்சியை அனுபவிக்கின்றனர் என்று கூறினார்.

இந்த உலக நாளில், தாங்கள் பெற்றுள்ள அழைத்தல் எனும் கொடைக்காக துறவியர் நன்றி செலுத்துகின்றனர் எனவும், இவ்வுலகின் கடினமான சூழல்கள் மத்தியில் துறவியரின் வாழ்வு சாட்சியம் பகரக்கூடியதாய் அணைய வேண்டும் எனவும், கர்தினால் Braz de Aviz அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2019, 15:44